Baakiyalakshmi Serial: கோபியை ஜெயிக்க பாக்யாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு...என்ன நடக்கப் போகிறது?
இனியாவிடம் தான் போய் என்னவென்று கேட்பதாக கூற, வேண்டாம் என மறுக்கும் பாக்யா, அவ புரிஞ்சிக்கிற நிலைமையில் இல்லை என சொல்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா வேலை ஒன்றிற்கு நேர்காணல் செல்லும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
கோபியால் வீட்டில் நடக்கும் சண்டை
இனியாவை பள்ளியில் இருந்து கோபி அழைத்து சென்றது தெரியாமல் பாக்யா செல்வியுடன் சேர்ந்து ஊரெல்லாம் தேடுகிறார். பின் கோபி அவளை வீட்டில் வந்து விடுவதை கண்டு அதிர்ச்சியடைகிறார். ஏன் இனியா சொல்லாமல் போன என ஜெனி கேட்க, பின் பாக்யாவும் அவளிடம் கேள்வியெழுப்புகிறார். ஆனால் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இனியா வீட்டுக்குள் செல்கிறார். உள்ளே சென்று சரமாரியாக பாக்யா இனியாவை திட்டுகிறார். மூர்த்தியும் பாக்யாவின் பரிதவிப்பை பற்றி கூறுகிறார். ஆனால் இனியா அசால்ட்டாக பதில் சொல்ல, நீ உங்கப்பா கூட போனது பிரச்சனை இல்ல. ஆனால் ஏன் சொல்லாம போன அதான் இப்ப கேள்வி என மூர்த்தி கேட்கிறார்.
உடனே செழியன் குறுக்கிட்டு அப்பா என்னிடம் சொல்லிட்டு தான் கூப்பிட்டு போனாரு. நான் வந்ததும் பாட்டியிடம் சொல்லிவிட்டேன் என கூற பாக்யா, ஜெனி, மூர்த்தி என அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். ஈஸ்வரியிடம் மூர்த்தி ஏன் பாக்யாவிடம் இதை கூறவில்லை என கேட்க, நான் மறந்துட்டேன் என கூலாக பதில் சொல்கிறார். இதைக்கேட்டு கடுப்பாகும் அவர், உன்கிட்டல்லாம் மனுஷன் பேசுவான்னா என ஆதங்கப்படுகிறார்.
அப்பாவுடன் செல்ல முடிவெடுத்த இனியா
இந்த கலவரத்தில் எனக்கு அப்பாவுடனே போகணும் போல இருக்கு என சொல்ல பாக்யா உடைந்து போகிறார். ஈஸ்வரி இப்பவாது பிள்ளைங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க. அப்பாவையும், பிள்ளைங்களையும் பிரிச்சிட்டு நீ நிம்மதியா இருக்க என கூற பாக்யா நொந்துப் போகிறார். இதன்பின்னர் வீட்டுக்கு வரும் எழிலிடம் ஜெனி நடந்ததை எல்லாம் கூறுகிறார். இனியாவிடம் தான் போய் என்னவென்று கேட்பதாக கூற, வேண்டாம் என மறுக்கும் பாக்யா, அவ புரிஞ்சிக்கிற நிலைமையில் இல்லை என சொல்கிறார்.
பாக்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு
திருமண மண்டபத்தில் சமையல் காண்டிராக்டர் வேலைக்கு விண்ணப்பித்திருந்த பாக்யாவுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வருகிறது. அவர் மூர்த்தி, ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு கிளம்ப முடிவு செய்கிறார். மூர்த்தி பாக்யாவின் விடா முயற்சியை பாராட்ட, ஈஸ்வரி வழக்கம் போல திட்டுவது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.