பாசமான அம்மாவாக களம் காணும் சித்தாரா... சன் டிவியில் விரைவில் 'பூவா தலையா' சீரியல்..!
Actress Chitara : சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் "பூவா தலையா" எனும் புதிய சீரியல் பாசமான அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் 'புது புது அர்த்தங்கள்' புகழ் சித்தாரா.
தொலைக்காட்சி என்றுமே ஒரு விரும்பத்தக்க பொழுதுபோக்கு அம்சமாக இருந்துள்ளது. என்றுமே முதலிடத்தை தக்க வைக்கும் தொலைக்காட்சி சேனலாக விளங்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, சீரியல்கள் என அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும்.
புதிய சீரியல் :
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா, வானத்தை போல என ஏராளமான சீரியல்கள் முன்னணியில் இருந்து வரும் நிலையில் பல புதிய சீரியல்களும் என்ட்ரி கொடுக்க தயாராக இருக்கின்றன. அந்த வகையில் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் தான் "பூவா தலையா".
முன்னணி நடிகர்கள் :
இந்த சீரியலில் ஏராளமான நடிகர்கள் நடிக்க உள்ளனர். 'ஈரமான ரோஜாவே' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பச்சைக்கிளி சீரியலில் ஹீரோவாக நடித்த கிஷோர் தேவ் தான் இந்த சீரியலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "நினைத்தாலே இனிக்கும்" சீரியலில் வில்லியாக நடித்த ஸ்வேதா நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சீரியலில் நடிகை லதா ராவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பாலச்சந்திரன் அறிமுகம் :
மேலும் இந்த சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் "புது புது அர்த்தங்கள்" புகழ் சித்தாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. 80ஸ் காலகட்டத்தில் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சித்தாராவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். அதற்கு பிறகு புது வசந்தம், புரியாத புதிர், படையப்பா, முகவரி, நட்புக்காக உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த சித்தாரா பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் சித்தாரா:
வசந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பராசக்தி, ஜெயா டிவியில் ஒளிபரப்பான கவரி மான்கள், ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஆர்த்தி மற்றும் கங்கா யமுனா சரஸ்வதி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் சித்தாரா. தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் "பூவா தலையா" சீரியலில் பாசமான அம்மாவை சுற்றிலும் நகரும் கதைக்களத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் சித்தாரா. இந்த தொடர் மாலை நேரங்களில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளது என கூறப்படுகிறது. மீண்டும் சித்தாராவை சின்னத்திரை ரசிகர்கள் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
தற்போது டைட்டில் மற்றும் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. விரைவில் பூவா தலையா சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நேரம், தேதி குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.