Tamil Cinema Sequel: தமிழ் இயக்குனர்களே, ஏன் இந்த வியாபார வெறி? உங்க போதைக்கு மக்கள் ஊறுகாயா? 2nd பார்ட் பாவங்கள்
தமிழ் சினிமாவில் உருவான இரண்டாம் பாக யுக்தியின் உண்மையான நோக்கம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ் சினிமாவின் இரண்டாம் பாகம் யாருடைய நன்மைக்காக எடுக்கப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ் சினிமா..!
ஹாலிவுட் சினிமாக்கள் எல்லாம் கற்பனைக்கே எட்டாத அளவிலான சூப்பர் ஹீரோ, வேற்றுகிரக வாசிகள் போன்ற யாருக்குமே ஒட்டாத கதைக்களங்களுகு சென்று விட்டன. ஆனால், தமிழ் சினிமாவோ இன்றளவும் குடும்பங்கள், உறவுகள், உணர்வுகள் தொடர்பான கதைக்களங்களை நேர்த்தியாக கையாண்டு ரசிகர்களை மகிழ்வித்து பல்வேறு படிப்பினைகளையும் வழங்கி வருகிறது. அவ்வாறு பேராதரவு பெற்ற படங்கள் கல்ட் & கிளாசிக் என கொண்டாடப்படும். அதவாது அதுபோன்ற படங்களை மீள் உருவாக்கம் செய்வது என்பது சாத்தியமற்றது என கூறுவர். ஆனால், இந்த கலாச்சாரம் இப்போதெல்லாம் மொத்தமாக மாறிவிட்டது.
2nd பார்ட் பாவங்கள்:
முன்பெல்லாம் ஒரு படம் பெரிய ஹிட் ஆகிவிட்டால், அந்த வெற்றி அந்த படத்தின் இயக்குனருக்கு ஒரு அடையாளமாக மாறிவிடும். காலா காலத்திற்கும் அந்த படம் கொண்டாடப்படும். ஆனால், தற்போது அந்த வெற்றியே பெரும் வணிகமாக்கப்படுகிறது. ஆம், அந்த வணிகத்தின் பெயர் தான் “இரண்டாம் பாகம்”. குறிப்பாக, தமிழ் சினிமாவில் வெளியாகும் இரண்டாம் பாகத்தின் இயக்குனர்கள், பெரும்பாலும் அதன் முதல் பாகத்தை இயக்கியவர்களாக தான் உள்ளனர். அவ்வாறு இரண்டாம் பாகம் எடுக்கும் இயக்குனர்கள் எல்லாருமே வெற்றிப்படங்களை கொடுக்க முடியாமல், தங்களது திரைப்பயணமே கேள்விக்குறியானவர்களாக தான் இருக்கிறார்கள். அதன் காரணமாக தான் ஏற்கனவே தங்களது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு படத்தின் தலைப்பை, வணிகத்திற்காக பயன்படுத்தி இரண்டாம் பாகத்தை எடுக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் இரண்டாம் பாகங்கள்:
சண்டக்கோழி 2, 2.0, சாமி 2, தேவி 2, மாரி 2, நாடோடிகள் 2, கலகலப்பு 2, சாட்டை 2, பசங்க 2, கோலி சோடா 2, தில்லுக்கு துட்டு 2, சென்னை-28 2 மற்றும் உறியடி 2 என தமிழ் சினிமாவில் ஏராளமான இரண்டாம் பாகங்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து சந்திரமுகி 2, ஜிகர் தண்டா 2, இந்தியன் 2 மற்றும் தனி ஒருவன் 2 போன்ற படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில் காஞ்சனா, சிங்கம், அரண்மனை மற்றும் பீட்சா போன்ற படங்கள் எல்லாம் தனி ரகம்.
வியாபார யுக்தி:
தமிழில் இதுவரை வெளியான இரண்டாம் பாகங்கள் பெரும்பாலும் உடனடியாக வந்தவை அல்ல. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தான் வெளியாகியுள்ளன. இதனை உற்றுநோக்கினாலே அதில் உள்ள வியாபார யுக்தியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வெற்றி இன்றி வறண்டு போய் திரைத்துறையில் தங்களுக்கான இடத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்படும் போது, வேறு வழியே இல்லை என்ற சூழலில் தான் இந்த இரண்டாம் பாகங்கள் உருவாகின்றன என்ற தகவலும் கிடைக்காமல் இல்லை. ஏற்கனவே வெற்றியை கொடுத்த ஒரு படத்தின் தலைப்பை பயன்படுத்தி ரசிகர்களை திரைக்கு வரவழைப்பதன் மூலம், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பிவிடலாம் என இயக்குனர்களும், நடிகர்களும் கணக்கு போடுகின்றனர்.
பலன் கிடைத்ததா?
ஆனால், இந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் கணக்கு பலிக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தமிழில் இதுவரை வெளியான இரண்டாம் பாகங்களில் பெரும்பாலானவை படுதோல்வியையே சந்தித்துள்ளன. குறிப்பாக முதல் பாகம் பொதுமக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தையே மொத்தமாக அழித்து, அப்படி ஒரு படம் வந்ததா என சினம் கொள்ளும் அளவிற்கு பல இரண்டாம் பாகங்கள் அமைந்துள்ளன. வெறும் டைட்டிலை மட்டுமே வைத்துக்கொண்டு இரண்டாம் பாகங்களாக தயாரான விஐபி 2, தலைநகரம் 2 மற்றும் கோ 2 போன்ற படங்கள் எல்லாம் வந்த வேகத்திலேயே காணாமல் போயின என்பதே உண்மை.
இப்படி தான் ஜெயிக்கணுமா?
லட்சக்கணக்கான மக்கள் தங்களது உழைப்பின் ஒரு பகுதியை சினிமாவிற்கு என ஒதுக்கி திரையரங்குகளுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வருகின்றனர். அதை கருத்தில் கொண்டாவது கோடிக்கணக்கில் ஊதியம் வாங்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள், சற்றே மெனக்கெட்டு ஒரு நல்ல கதைக்களத்தை தேர்வு செய்து ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யலாம். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் வெறும் தலைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றுவது எல்லாம் என்னங்க சார் நியாயம்? உங்கள் வெற்றிக்காக எங்களை ஏமாற்றுவது எல்லாம் ஏதோ உங்கள் போதைக்கு நாங்கள் ஊறுகாயா? எனவும் கேட்க தோன்றுகிறது..!