Tamannaah Relationship: ஆமாம்..! இவரைதான் காதலிக்கிறேன் - நடிகை தமன்னா ஓபன் டாக்.. இந்தி நடிகருடன் ரிலேஷன்ஷிப்..!
நடிகை தமன்னா தான் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை தமன்னா தான் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
விஜய் வர்மாவுடன் காதல்:
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். தங்களுக்கு இடையேயான இந்த உறவானது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸின் படப்பிடிப்பின் போது தொடங்கியதாக கூறியுள்ளார் . தமன்னா - விஜய் வர்மா முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென்சர்மா, ஆர் பால்கி மற்றும் சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இணையத்தில் பரவிய வீடியோ:
தமன்னாவும், விஜய் வர்மாவும் கோவாவில் நடந்த புத்தாண்டு விருந்தில் முத்தமிட்டுக் கொண்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதனால், அவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால், இதுதொடர்பாக இருவருமே எந்தவித கருத்தும் கூறாமல் இருந்தனர். அதேநேரம், மும்பையில் அடிக்கடி ஜோடியாக வலம் வந்தனர். இதையடுத்து இருவரும் காதலிக்கிறீர்களா என கேட்டபோது, "நாங்கள் ஒன்றாக ஒரு படம் நடித்துள்ளோம். இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவை அனைத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமில்லை" என்று தமன்னா பதிலளித்து இருந்தார்.
”காதலிக்க இது தான் காரணம்”
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், “ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவர்மீது காதல் கொள்வேன் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு எத்தனையோ சக நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் யாரிடமாவது காதல் கொள்ள வேண்டும் என்றால், அவரிடம் தனிப்பட்ட முறையில் எதாவது இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கைக்காக என்ன செய்கிறார்கள் என்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது நடக்கக் காரணம் அதுவல்ல என்று நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
”அவர் தான் என் மகிழ்ச்சிகான இடம்”
தொடர்ந்து “லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் தான் விஜய் வர்மா உடன் எனக்கு காதல் ஏற்பட்டது. நான் மிகவும் எதிர்பார்க்கும் நபர் அவர். அவருடனான எனது உறவு என்பது மிக மிக இயல்பாக ஏற்பட்டது. தனக்கான எல்லாவற்றையும் விட்டுவிட்டு எனக்காக வந்தவர். அதனால் எனது கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வருவது எனக்கு மிகவும் எளிதாகிவிட்டது. சாதிக்கும் பெண்கள் தனக்கான எல்லாவற்றிற்கும் கடினமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கும் பிரச்சனை உள்ளது. ஆனால் மிகவும் எளிமையாக இருக்கும் போது, நீங்களாக கடினமாக நடக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்தியாவில் ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதையும் யாரோ ஒருவருக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். உங்களுக்கான சரியான நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், நீங்கள் உடல் ரீதியாக அல்லது அந்த நபரின் புரிதலுக்கு உதவும் பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நான் எனக்காக ஒரு உலகத்தை உருவாக்கியது போல் உணர்ந்தேன். நான் எதுவும் செய்யாமலேயே அந்த உலகத்தைப் புரிந்துகொண்ட ஒரு நபர் எனக்கு கிடைத்தார். அவர் என் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டநபர், ஆம், அவர் என்னுடைய மகிழ்ச்சிக்கான இடம்” என விஜய் வர்மாவை தமன்னா குறிப்பிட்டார்.
யார் இந்த விஜய் வர்மா:
இந்தி நடிகரான விஜய் வர்மா கடந்த 2012ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிங்க் மற்றும் கல்லி பாய் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் அப்பாய் படத்தில் வில்லனாக நடித்து விஜய் வர்மா கவனம் ஈர்த்து இருந்தார்.