(Source: ECI/ABP News/ABP Majha)
Rajinikanth About Tamil : "தமிழன் தமிழ் பேசுனா மட்டும் தமிழ் வளராதுங்க” : மாணவர்களிடையே பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
"வேற ஏதாவது மொழி தப்பு தப்பா பேசினா கிண்டல் பண்ண மாட்டாங்க, ரசிப்பாங்க. ஆனா இங்கிலீஷ் தப்பா பேசினா கிண்டல் பண்ணிடுவாங்க. அதுக்கு பயந்தே பலர் இங்கிலீஷ் பேச மாட்டேங்கறாங்க"
ஆங்கிலத்தின் அவசியம் குறித்தும், அதனை பேச பேசத்தான் வரும் என்று பல்கலைக்கழக மாணவர்களிடையே ரஜினிகாந்த், தன் வாழ்க்கையில் இருந்து ஒரு கதையையே எடுத்துக்காட்டாக கூறி பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் பேச்சுக்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் பெரும் ஆளுமை என்றாலும், அவருடைய மேடை பேச்சுக்களை விரும்புபவர்கள் பலர் உண்டு. தத்துவார்த்தமாகவும், மக்களுக்கு தேவையான கருத்துகளையும் பேசக்கூடிய அவர், ஸ்வாரஸ்யமாகவும் பேசுவார் என்பது நாம் அறிந்ததுதான். குறிப்பாக கல்வி குறித்தும், இளைஞர்கள் மேம்பாடு குறித்தும் தன் வாழ்க்கையில் இருந்தே கதைகளை எடுத்துக்காட்டாக கூறி முக்கியத்துவத்தை உணர்த்துவது அவர் பாணி. அவருடைய மோட்டிவேஷன் பேச்சுக்கள் திணிக்கும் விதமாக இல்லாமல், அக்கறையுடன் இருப்பதால் பலரை எளிதில் சென்று சேரும். அப்படி சமீபத்தில் ஆங்கிலத்தின் அவசியம் குறித்து ஒரு மேடையில் மாணவர்களிடம் பேசி உள்ளார்.
ரஜினிகாந்த்தின் பள்ளி கால கதை
இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த், "நான் பெங்களூர்ல கன்னட மீடியம் ஸ்கூல்ல படிச்சேன், எட்டாவது வரைக்கும் நல்லா படிச்சேன் 98% வாங்குனேன். அப்புறம் நல்லா படிக்கிறேன்ன்னு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க, அங்க எல்லாமே இங்கிலீஷ், நடத்துறதும் இங்கிலீஷ், எனக்கு ஒண்ணுமே புரியல, 98 மார்க் எடுக்குற நான் 17,18 மார்க் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். இப்போ பல்கலைக்கழகங்கள்ல படிக்குற உங்கள்ல பல பேர் தமிழ் மீடியம் ஸ்கூல்ல படிச்சிருப்பீங்க. இப்ப டிகிரி, தொழில்முறை படிப்புகள் எல்லாம் ஆங்கில வழிதான். அதை படிக்க இங்கிலீஷ் தெரிலன்னா சிரமம்", என்றார்.
கிண்டல் பண்ணுவாங்கன்னு பயப்பட வேண்டாம்
மேலும், "வேற ஏதாவது மொழி தப்பு தப்பா பேசினா கிண்டல் பண்ண மாட்டாங்க, ரசிப்பாங்க. ஆனா இங்கிலீஷ் தப்பா பேசினா கிண்டல் பண்ணிடுவாங்க. அதுக்கு பயந்தே பலர் இங்கிலீஷ் பேச மாட்டேங்கறாங்க. இங்கிலீஷ் பேச பேசதான் வரும். எல்லோரும் உங்கள் நண்பர்கள் கூட இங்கிலீஷ் பேச பழகுங்க. அதுதான் உங்க எதிர்காலம். உங்கள் தொழிலுக்கு அதுதான் உதவும். உலக மொழி ஆகிடுச்சு, இது கம்பியூட்டர் உலகம். ஆங்கிலம் கத்துக்கிட்டாதான் தொழில்ல முன்னேற முடியும்", என்று பேசினார்.
தமிழ் பேசுனா மட்டும் தமிழ் வளராது
மேலும் தமிழன் முன்னேற வழி கூறிய அவர், "தமிழன் தமிழ் பேசுனா மட்டும் தமிழ் வளராதுங்க… தமிழனும் வளர்ந்தாதான் தமிழ் வளரும். பல இளைஞர்கள் ஆங்கிலம் பேசி, பல மாநிலங்கள், பல நாடுகளுக்கு சென்று பேரும், புகழும் வாங்கினாதான் அது தமிழனுக்கும் பேரு, தமிழுக்கும் பேரு. சுந்தர் பிச்சையால யாருக்கு பேரு, தமிழுக்கு பேரு, தமிழனுக்கு பேரு… அப்துல் கலாமால யாருக்கு பேரு, தமிழனுக்கு பேரு, தமிழுக்கு பேரு. ஏன்னா அவங்க ஆங்கிலப் புலமை பெற்றிருந்தாங்க", என்றார்.