Sudha Kongara Injured: “ரொம்ப வலிக்குது.. இப்படி ஒரு ப்ரேக்கா?”: சூரரைப்போற்று இயக்குநருக்கு என்ன ஆச்சு?
சுதா கொங்கராவின் பதிவில் அவரது தங்கம் குறும்படத்தில் நடித்த நடிகர் ஷாந்தனு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் அவர் நலம் பெற வாழ்த்தி பதிவிட்டுள்ளனர்.

இயக்குநர் சுதா கொங்கரா கையில் கட்டுடன் அடிபட்ட நிலையில் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.
சுதா கொங்கரா
ஆண் இயக்குநர்களின் பார்வையிலேயே பெரும்பான்மை கதைகள் சொல்லப்பட்டு வந்த தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குநராய் குறிப்பாக கமர்ஷியல் படங்களை இயக்கும் வெற்றிகரமான இயக்குநராய் உருவெடுத்து கவனமீர்த்தவர் இயக்குநர் சுதா கொங்கரா.
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என அடுத்தடுத்து சிறந்த கமர்ஷியல் வெற்றிப் படங்களைக் கொடுத்து இயக்குநராக விரும்பும் பல பெண்களுக்கும் முன்மாதிரி இயக்குநராக உருவெடுத்துள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.
சில ஆண்டுகளுக்கு முன் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சூர்யாவுக்கு சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ சிறப்பான ‘ கம்பேக்’ படமாக அமைந்ததோடு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தியில் சூரரைப் போற்று!
ஏர் டெக்கான் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் கோலிவுட் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன், அந்த ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை,சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளி சாதனைப் படைத்தது.
தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ள சுதா கொங்கரா ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை நடிகர் அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகை ராதிகா மதன், பரேஷ் ராவல் ஆகியோர் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தை நடிகர் சூர்யாவும் இணைந்து தயாரிக்கிறார்.
கையில் அடி!
இந்நிலையில், இன்று சுதா கொங்கரா தன் கையில் கட்டுடன் அடி பட்ட நிலையில் புகைப்படங்களைப் பகிர்ந்து வேதனை தெரிவித்துள்ளார். அதில், ”மிகுந்த வலியாக உள்ளது. ஒரு மாதம் ப்ரேக் எடுத்துள்ளேன். இது போன்ற பிரேக்கை நான் வேண்டவில்லை” என வலி வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
Super painful. Super annoying! On a break for a month 😒 #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf
— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023
இந்நிலையில் சுதா கொங்கராவின் பதிவில் அவரது தங்கம் குறும்படத்தில் நடித்த நடிகர் ஷாந்தனு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் அவர் நலம் பெற வாழ்த்தி பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து படப்பிடிப்பின்போது நிகழ்ந்ததா என்பது குறித்தும் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்த படம்
முன்னதாக தான் ஆடி கார் வாங்கியது குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்த சுதா கொங்கரா, இயக்குநர் மணி ரத்னம், தன் நண்பரும் நடிகருமான சூர்யா, தன் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோருடன் காரில் செல்லும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
ரத்தன் டாடாவின் பயோபிக் படத்தை அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கலாம் இயக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அல்லது நடிகர் சூர்யா அப்படத்தில் நடிக்கக் கூடும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

