Star - Raja Rani Pandian: ரூ.3500 சம்பளம், நடிப்பு தான் மூச்சு.. ஸ்டார் பட இயக்குநரின் அப்பா “ராஜா ராணி பாண்டியன்” உருக்கம்!
தமிழ் சினிமாவில் 80கள் தொடங்கி அட்லீயின் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் பாண்டியன் நடித்திருப்பார்.
'பியார் பிரேம காதல்' திரைப்படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில், கவின் நடித்துள்ள 'ஸ்டார்' படம் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். கடந்த ஏப்.27ஆம் தேதி வெளியான ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை அட சொல்ல வைத்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வரவேற்பைப் பெற்ற ட்ரெய்லர்
சினிமாவில் ஸ்டாராகக் கனவு காணும் எளிய நபரின் போராட்டங்கள், வலி, காதல் என உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், இப்படத்தில் நடித்துள்ள கோலிவுட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரமான கவின் மீது நம்பிக்கையை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது.
வரும் மே 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் நிலையில் இப்படம் நடிகராகப் போராடிய இளனின் அப்பா பாண்டியனின் கதை என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இயக்குநர் இளனும் இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.
இயக்குநர் இளனின் தந்தை பாண்டியன்
தமிழ் சினிமாவில் 80கள் தொடங்கி அட்லீயின் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் பாண்டியன் நடித்திருப்பார். இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற ஸ்டார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாண்டியன் கலந்துகொண்டு பேசியதாவது:
என்னை இந்தத் திரைப்படத்துறைக்கு கைப்பிடித்து அழைத்து வந்தவர் ஸ்டில்ஸ் ரவி. வழக்கமாக என் பேச்சை நான் இப்படி தான் ஆரம்பிப்பேன். “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்”. இது வள்ளுவரின் வாய்மொழி. அதற்கு தகுந்தாற்போல் இளன் என்னை நினைக்க வைத்திருக்கார். சிறு வயதிலேயே இளன் ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டியில் கலந்துகொள்வார். என்னை நடிகை, அண்ணி “நளினி உன் ஆசையெல்லாம் இளன் மூலம் தீர்த்துக்கறியா?” என கிண்டல் செய்வார்.
ஸ்டில் ஃபோட்டோகிராஃபர் டூ நடிகர்
இவரைப் படிக்க வைத்து ஏரோநெட்டிகல் மெரிட்டில் சென்றார். இடையில் என்னை வைத்து ஷார்ட் ஃபிலிம் எடுத்தார். நான் “நீ படிப்பை விட்டு இந்தத் துறைக்கு வராதே” என என் நிலமையைக் காட்டி எடுத்து சொன்னேன். “பட்டப்படிப்பு முடிச்சிட்டு நாலு வருஷம் நான் வீட்டில் இருந்தால் எனக்கு சோறு போடுவீங்களா?” என பதிலுக்கு இளன் கேட்டார். நான் போடுவேன் என்றேன்.
மேலும் “2 வருஷம் கொடுங்க இயக்குநராகிறேன்” என்றார். ஆனால் ஒரு வருஷத்திலேயே அவர் இயக்குநராகிக் காண்பித்தார். பெற்றோரா பிள்ளைகளுக்கு அவர்கள் விருப்பப்படி போக வாய்ப்பு தர வேண்டும், அவர்கள் வளர்ச்சிக்கு தடை பண்ணக்கூடாது என்பதற்காக தான் இதை நான் சொல்கிறேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவமானம்
நான் ஸ்டில் ஃபோட்டோகிராஃபராக படங்களில் பணியாற்றியுள்ளேன். நடிகர் - இயக்குநர் இருவரும் எப்படி நடிக்கிறார்கள் எனப் பார்ப்பேன். “இவர் சொல்வது போல் அவர் நடிக்கவில்லை, நானா இருந்தால் இவர் சொல்வது மாதிரியே நடிப்பேனே” என நான் எனக்குள்ளேயே ஒப்பிட்டுக் கொள்வேன். ரொம்ப ஆர்வமாக அப்படி நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை, “ உன் மூஞ்சிய வச்சிட்டு இங்க நிக்காதய்யா..” என அங்கே இருந்தவர் சொன்னார்.
எனக்கு அப்போது 24 வயது. நான் அழுதுவிட்டேன். நான் மதுரையில் இருந்து பெரிய ஹீரோ ஆவேன் என்ற நம்பிக்கையில் தான் வந்தேன். அன்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நான் அழுதிருப்பேன். அப்போது “இந்த மூஞ்சிய அசிங்கப்படுத்திட்ட இல்ல, நான் திரையில் இருப்பேன், அதைப் பார்க்க நீ இருக்க மாட்டாய்” என கண்ணாடி முன் சபதமிட்டு வந்தேன். மனதில் உறுதி வேண்டும் படத்தின் ஷூட்டிங்கில் கிளாப் அப்போது அடிக்கப்பட்டது. இலக்கை நோக்கி பயணிப்பார்கள் ஆனால் அதை சிலர் தான் சென்றடைவார்கள். இன்று என் மகன் இந்த நிலைக்கு வந்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.
ராஜா ராணி பட சம்பளம்
நான் இந்த நிலைக்கு இன்று வருவதற்கு காரணம் ஸ்டில்ஸ் ரவி தான். எனக்கு ஒரு லட்சம் தருகிறேன் இந்த வேலையை செய் என்று சொன்னாலும் 500 தரும் நடிப்பு வேலைக்கு தான் செல்வேன். இது மாதிரி நடந்துள்ளது. ராஜா ராணி படத்தின்போது நான் ஃபோட்டோகிராஃபர். மலேசியாவில் ஒரு படத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் சம்பளம், ஃபோட்டோகிராஃபராக வா என்றார்கள். ஆனால் நான் “ராஜா ராணியில் நல்ல கேரக்டரில், சத்யராஜ், நயன்தாராவுடன் எல்லாம் நடிக்கிறேன், வர மாட்டேன்” என்றேன். இந்தப் படத்தில் எனக்கு 3500 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். ஷார்ட் ஃபிலிமில் நாளைய இயக்குநரில் 5000 ரூபாய் கொடுத்தார்கள். நான் அட்லீயிடம் கொஞ்சம் சேர்த்து தருமாறு கேட்டேன். பின் படக்குழுவில் “இந்த சம்பளத்துடன் பின்னாடி ஒரு சைஃபர் சேர்த்துக் கொள், நீ இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவ்வளவு சம்பளம் வாங்குவாய்” என்றார்கள். நான் இப்போது அதேபோல் வாங்குகிறேன்.
நான் நடிகனாக நூறாவது நாள் நிகழ்வுக்கு போனது அதுதான் முதல்முறை. அப்போது யூகி சேது “யார் இந்த ஆர்ட்டிஸ்ட் எனப் பார்ப்பதற்காக தான் நான் வந்தேன்” என்றார். அப்போது நான் பந்தா பாண்டி என ஒரு கார்டு அடித்து வைத்திருப்பேன். அதை யூகி சேதுவிடம் காண்பித்தபோது “நீ காமெடியன் அல்ல நல்ல நடிகன், இன்று முதல் நீ ராஜா ராணி பாண்டியன்” என்றார். அன்று முதல் நான் ராஜா ராணி பாண்டியனாக மாறினேன். அவருக்கு நன்றி” எனப் பேசியுள்ளார்.