Sivakarthikeyan: இது ஒரு அழகிய கனா காலம் - மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்!
தனது மகன் குகன் தாஸின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தனது மகன் குகன் தாஸின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை
சின்னத்திரையில் தனது மிமிக்ரி, டைமிங் டயலாக் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் சிவகார்த்திகேயன் பிரபலமானார்.
தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். குறிப்பாக ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் அதிகளவில் பேமிலி ஆடியன்ஸை கொண்ட நடிகராக சிவா மாறியுள்ளார். தற்போது மாவீரன் படத்தின் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து அவர் நடித்து வரும் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் குடும்பம்
இப்படியான நிலையில் 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்த சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார். இவர் சிவா தயாரித்த கனா படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலின் சில வரிகளை பாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் சிவாகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மகன் பிறந்தான். மகனுக்கு மறைந்த தனது தந்தை தாஸின் நினைவாக ’குகன் தாஸ்’ என பெயரிட்டார்.
இப்படியான நிலையில் இன்று குகன் தாஸூக்கு முதல் பிறந்தநாளாகும். அவர் தனது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு “ஹேப்பி பர்த்டே தம்பி” என அப்பா சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலக பிரபலங்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் குகன் தாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.