28 Years Of Indian: 28 ஆண்டுகளைக் கடக்கும் இந்தியன்.. இந்த முறை யாருக்கான அரசியல் பேசுவார் கமல்?
இந்தியன் படம் 28 ஆண்டுகளை கடந்துள்ளது. அடுத்தபடியாக ‘இந்தியன் 2’ வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்திற்கான அரசியல் இன்றைய சூழலில் எவ்வளவு பொருத்தமானது என்பதைப் பார்க்கலாம்.
ஷங்கரின் ராபின் ஹூட்
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அன்றைய சமூகச்சூழலில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க ஒரு தனி நபர் போராடுகிறார். வாய்மொழிக்கதைகளில் வரலாற்றில் நாம் இந்த மாதிரியான நபர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். இந்த நாயகர்கள் பெரும்பாலும் வன்முறையைக் கையில் எடுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
சட்டத்துக்கு புறம்பாக வன்முறையின் வழியாக குற்றவாளிகளை தண்டிப்பது, இருப்பவர்களிடம் இருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்பது போன்ற சேவைகளை செய்வார் இந்த நபர். இந்த மாதிரி சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனித்து செயல்படும் நபர்களை Vigilante என்று சொல்வர்.
ராபின் ஹூட் , பேட்மேன் போன்றவை நாம் அறிந்த புகழ்பெற்ற Vigilante கதாபாத்திரங்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்த வகை கதாபாத்திரங்களை தொடர்ச்சியாக தனது படங்களில் நாயகனாக வைத்து வருகிறார் ஷங்கர்.
இந்தியன்
இந்த வகைப் படங்களுக்கு ஜெண்டில்மேன் படத்தில் பிள்ளையார் சுழி போட்டிருந்தாலும் முழுக்க முழுக்க ஷங்கர் களத்தில் இறங்கிய படம் ‘இந்தியன்’. சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தை இப்படத்தின் மையக் கதையாக இருந்தது இந்தியன் 2 படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.
பல்வேறு ஆசைகளுடனும் கனவுகளுடனும் வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்திய மக்கள் அடுத்த 30 ஆண்டுகளில் ஏன் சுதந்திரம் வாங்கினோம் என்கிற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆங்கிலேயர்களிடம் இருந்து நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் இந்திய ஆதிக்க சமூகத்தினருக்கு கைமாறுகிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விரக்தியில் சுற்றினார்கள். இந்தியன் படம் வெளியாவதற்கு முன் பாலச்சந்தர் ‘வறுமையில் நிறம் சிவப்பு’ படத்தில் இந்த நிலையை எதார்த்தமான ஒரு கதைக்களத்தில் படமாக்கி இருந்தார். இது தவிர்த்து அன்றைய சூழலில் வெளியான எல்லா படங்களிலும் "இந்த நாடு நாசமாப் போச்சு" என்கிற வசனத்தை பார்க்கலாம்.
அப்படியான ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இன்றைய சூழலில் சட்டத்தை தன் கையில் எடுத்தால் என்ன என்கிற கற்பனையே இந்தியன் படத்தின் ஒன்லைன். நேர்மையாக இருந்து வாழ்க்கையில் எதையுமே அடையாத தந்தையை வெறுக்கும் மகன். பிழைக்க, சம்பாதிக்க மற்றவர்கள் என்ன ஊழல் செய்கிறார்களோ அதையே அவனும் செய்கிறான். கடைசியில் தனது மகனையே கொலை செய்யப் போகிறார் சேனாதிபதி.
ஷங்கரின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், தேசப்பற்று, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என பக்கா கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருந்ததே ரசிகர்களிடம் படத்துக்கு கிடைத்த ஆதரவுக்கு முக்கிய காரணங்கள். எல்லாவற்றுக்கும் மேல் இப்படத்தில் கமலின் தோற்றம் எந்த தரப்பிலும் மறுக்க முடியாத ஒரு தாக்கத்தை செலுத்தியது என்பதும் உண்மை. இருந்தும் இன்னொரு பக்கம் படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு எதிரான விமர்சனங்களும் எழவே செய்தன.
யாருக்கான அரசியலைப் பேசியது இந்தியன்?
திரையரங்கில் வெளியாகி அதுவரை சாதனை படைத்த தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது இந்தியன். அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதலில் இருந்த ரஜினியின் பாட்ஷா படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்தது. சிறந்த கலை வடிவமைப்பு, சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், சிறந்த நடிகர் என மூன்று தேசிய விருதுகளை வென்றது இந்தியன். மேலும் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கரைப் பற்றிய நம் புரிதல் என்னவாக இருந்திருக்கிறது என்பது வேறு விஷயம்.
ஆனால் உண்மையில் இந்தியன் படமோ அல்லது தேசத்தின் நலனுக்காக போராடிய ஷங்கர் படத்தின் நாயகர்களுமோ யாருக்கான அரசியலை பேசினார்கள், அவரது படங்களில் கஷ்டப்படும் கதாபாத்திரங்கள் வசனங்கள் என எல்லாமே ஆதிக்க சாதிய வகுப்பைச் சேர்ந்தவர்களின் புலம்பல்களாக தான் பெரும்பாலும் இருந்திருக்கிறது.
அரசின் நிர்வாகப் பொறுப்புகளில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகார பகிர்வுக்குப் பின் இடைநிலை சாதிகளுக்கு மாறியது. இன்று சாதிரீதியான வெறுப்பு நிறைந்த கருத்துக்களையும் ஆண்ட பரம்பரை என்று மார்தட்டிக் கொள்பவர்களுக்கு தான் நாடு நாசமாக போகிறது அதில் நமக்கு எதுவும் இல்லையே என்கிற ஆதங்கம் இருந்ததே ஒழிய, பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் குரல் இந்தப் படங்களில் இல்லவே இல்லை. கூடுதலாக ஷங்கரின் படங்களில் அடிப்படை ஜனநாயகக் கடமையே செய்யாமல் குடித்துவிட்டு பார்க்கில் உறங்குபவர்களாகத்தான் விளிம்புநிலை மக்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
யாருக்கான அரசியலைப் பேசும் இந்தியன் 2?
28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியானது. சமகால அரசியல் சூழலை பகடி செய்யும் விதமாக இந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும் ஊழலைப் பொறுத்தவரை அன்றைக்கும் இன்றைக்கும் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. ஆனால் இன்றைய அரசியல் கருத்தாடல் என்பது மறுவரையறைக்கு உட்பட்டு வருகிறது. ஏற்கெனவே எழுதப்பட்ட வரலாறுகள் ஒன்று ஆங்கிலேயர்கள் பார்வையில் இருக்கின்றன அல்லது இங்கு இருக்கும் ஆதிக்க சமூகத்தினரின் பிரதிநிதிகளால் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு தனிநபரால் நாட்டைத் திருத்த முடியும் என்கிற கருத்துக்கள் வழக்கொழிந்துவிட்டன.
தேசியவாத கருத்தக்களைப் பொறுத்தவரை இந்துத்துவ கருத்துக்களே தேசியவாத கருத்துக்களாக மாறியிருக்கின்றன. இஸ்லாமியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்ற விமர்சனங்கள் எழுந்தபடி இருக்கின்றன. இப்படியான ஒரு சூழலில் மீண்டும் நாட்டைத் திருத்துவது, வன்முறை வழியாக ஊழலை ஒழிப்பது என இந்திய சமுகத்தின் மிகப்பெரிய நோயாக இருக்கும் சாதியையும் சாதிரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றிய எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் அதே பழைய புராணத்தை பாடப்போகிறதா இந்தியன் 2 என்கிற கேள்வி எழுகிறது.
தேவைப்படும் போதெல்லாம் சேனாதிபதி திரும்பி வருவேன் என்கிறார். ஆனால் அப்படி வந்து அவர் யாருக்கான அரசியலை பேசப் போகிறார் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.