Selvaragavan: நான் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் ஒன்று 'ஃபர்ஹானா'... செல்வராகவன் நெகிழ்ச்சி ட்வீட்!
“நான் இதுவரையில் கேட்ட மிக சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” - ஃபர்ஹானா படம் குறித்து செல்வராகவன் ட்வீட்
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், அனு மோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஃபர்ஹானா'.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணியை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள ஒரு படம். இப்படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்புகள் தடை விதிக்கக் கோரி சர்ச்சைகளை எழுப்பினர். தொடர்ந்து, இப்படம் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல என அறிக்கை வெளியிட்டது படக்குழு. இப்படத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்து இருந்தார் படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.
ஒன்லைன் ஸ்டோரி :
இஸ்லாமிய குடும்பத்தைc சேர்ந்த நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்கிறார். இஸ்லாத்தை முறையாகக் கடைபிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையின் அனுமதி பெற்று குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக வேலைக்குச் செல்கிறார். அங்கு அவர்கள் சந்திக்கும் எதிர்பாராத சிக்கல்களும் தான் படத்தின் கதை.
ஐஸ்வர்யா ராஜேஷ் கணவராக மனைவியை தாங்கிப் பிடிக்கும் கணவனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியலை மிக அழகாக வெளிப்படுத்திய இயக்குநர் நெல்சன் வெங்கடேஷுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
செல்வராகவன் ட்வீட் :
இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ள நிலையில், பலருக்கும் அவரது கதாபாத்திரம் சர்ப்ரைஸ் தந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
செல்வராகவன் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே இதுதான் சிறந்த கதாபாத்திரம் என அவரது ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஹானா படம் குறித்து முன்னதாக செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். ”என் வாழ்க்கையில் நான் இதுவரையில் கேட்ட மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று ஃபர்ஹானா. இயக்குநர் நெல்சன் வெங்கட் இதை மிக அழகான படமாகக் கொடுத்துள்ளார். அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் இயக்குநர் செல்வராகவன் :
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். சமீப காலமாக அவர் தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார். பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் செல்வராகவனை அவரது ரசிகர்கள் ஒரு நடிகராகவும் வரவேற்பு கொடுத்துள்ளனர். இருப்பினும் அவர் மீண்டும் படங்களை இயக்குவதிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.