Pooja Kannan: சாய் பல்லவி வீட்ல நிச்சயதார்த்தம்.. பூரிப்புடன் ஃபோட்டோ பகிர்ந்த பூஜா கண்ணன்!
சென்ற வாரம் தன் காதலரும் வருங்கால கணவருமான வினீத் பற்றி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு பூஜா ஷாக் கொடுத்தார்.
பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணன், ‘சித்திரை செவ்வானம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி தந்தார். ஆனால் தன் அக்கா சாய் பல்லவியைப் போல் அடுத்தடுத்து படங்களில் நடிக்காமல், பூஜா ப்ரேக் எடுத்தார்.
எனினும் தன் அக்கா சாய் பல்லவியுடன் இணைந்து புகைப்படங்கள் பகிர்வது, சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பது என தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு அவர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார்.
இந்நிலையில் சென்ற வாரம் தன் காதலரும் வருங்கால கணவருமான வினீத் பற்றி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அக்கா சாய் பல்லவி ஒருபுறம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக சினிமாவில் வலம் வர, மறுபுறம் தங்கை பூஜா தன் நிச்சயதார்த்த அப்டேட் தந்தது இருவரது ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் தங்கள் காதல் தருணங்களை அழகான வீடியோ தொகுப்பாகப் பதிவிட்டிருந்த பூஜா, “தன்னலமற்று எப்படி காதலிப்பது, காதலில் எப்படி திளைத்திருப்பது என எனக்கு கற்றுத் தந்தவர் இவர் தான் வினீத். என் க்ரைம் பார்ட்னர்.. என் வாழ்க்கைத்துணை” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
பூஜாவின் இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ்களை அள்ளியது. இந்நிலையில் பூஜா தன் நிச்சயதார்த்த புகைப்படங்களை தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கையில் மெஹந்தி வைத்து மகிழ்ச்சியாக பூரித்தபடியும், அக்கா சாய் பல்லவியுடன் அகமகிழ்ந்து இருக்கும்படியும் பூஜா பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்களை தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பூஜா பகிர்ந்துள்ளார்.
நேற்று பூஜா - வினீத் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகக் கூறப்படும் நிலையில், விரைவில் திருமண தேதியை பூஜா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.