RC15: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் டைட்டில் சி.இ.ஓ...? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
ஆர்.சி.15 படத்தின் டைட்டில் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது அதன் டைட்டில் 'சி.இ.ஓ' என்ற தகவல் இணையத்தில் கசிந்து மிகவும் வைரலாக பரவி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒரு பக்கம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் அதேவேளையில் நடிகர் ராம்சரண் இயக்கும் ஆர்.சி. 15 திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் துவங்கினார். அந்த வகையில் ஆர்.சி. 15 படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரீஸ் தயாரிக்கும் ஆர்.சி. 15 திரைப்படத்தில் ராம்சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். எஸ். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு நடனத்தை வடிவமைக்கிறார் பிரபுதேவா.
வெளியானது படத்தின் டைட்டில் :
ராம் சரண் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வருகிறது. பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் டைட்டில் ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷலாக மார்ச் 27ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. ஆனால் தற்போது ஆர்.சி. 15 திரைப்படத்திற்கு 'சி.இ.ஓ' என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
இது உண்மைதானா ?
சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்துக்கு பிறகு நடிகர் ராம் சரண் நடித்து வரும் திரைப்படம் ஆர்.சி. 15 என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராம் சரண் ரசிகர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது படத்தின் டைட்டில் என ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிடுமாறு படக்குழுவிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்ததை தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் 'சி.இ.ஓ' தான் ஆர்.சி.15 படத்தின் உண்மையான டைட்டிலா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் வெளியிடப்படும் என அறிவிப்பையும் மீறி டைட்டில் தற்போது கசிந்துள்ளது. இது உண்மை தானா என்பதை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.