உக்ரைனில் வசிக்கும் தனது பாதுகாவலருக்காக உதவிய ஆர்.ஆர்.ஆர் நடிகர்.. ராம்சரண் என்ன சொன்னார் தெரியுமா?
உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என ஆர்ஆர்ஆர் புரோமஷன் விழாவில் நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என ஆர்ஆர்ஆர் புரோமஷன் விழாவில் நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் இதுவரை படப்பிடிப்புக்காக சென்ற நாடுகளிலேயே உக்ரைன் தான் மிகவும் சிறந்த நாடு. உக்ரைனில் போர் என்றதும் எனக்குப் பதற்றமாக இருந்தது. நான் உக்ரைனில் எனக்கு பாதுகாவலராக இருந்த நபருக்கு ஃபோன் செய்து நலம் விசாரித்தேன். அப்போது அவர் என் 85 வயது நாட்டிற்காக தெருவில் துப்பாக்கியுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றார். அவர்களுக்கு என்னால் நிதி உதவி மட்டுமே செய்ய முடிந்தது. அவர்கள் யாருமே இதுபோன்ற மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டியவர்கள் இல்லை. அங்கு விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறேன். உக்ரைன் மக்களுடன் நான் நிற்கிறேன்" என்று கூறியுள்ளார். கொரோனா வேளையில் கூட அவர் உக்ரைனில் அவருக்குத் தெரிந்த மக்களுக்காக உதவியுள்ளாராம்.
ஆர்ஆர்ஆர் படத்தின், நாட்டுக்குத்து பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டது.
ஆர்ஆர்ஆர்.. எகிறும் எதிர்பார்ப்பு
‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.,’ என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்தனர். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்டில், உக்ரைனில் படத்தின் கடைசி ஷெட்யூல் முடிந்தது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், கடந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பல காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, ஆர்ஆர்ஆர் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா, ஒமிக்ரான் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுகிறது என படக்குழு அறிவித்திருந்தது.
தமிழில் லைகா நிறுவனம் வெளியிடும் இப்படத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே பாகுபலி படத்துக்கு வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவழியாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25ல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமான புரோமஷனல் நிகழ்ச்சி ஒன்றுக்கு படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. ஆந்திர, கர்நாடகா எல்லையில் உள்ள நகரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் படத்தில் பணியாற்றிய அனைத்துப் பெரும் புள்ளிகளும் மேடை ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.