Rajinikanth Movies Remake : சூப்பர்ஹிட் முதல் முரட்டு ஃப்ளாப் வரை.. தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ரஜினிகாந்த் படங்கள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தப் படங்களின் டைட்டிலை வைப்பதிலும் அதே படங்களை ரீமேக் செய்வதிலும் பெரிய ஆர்வம் காட்டி வந்தார்கள்..
1981-ஆம் ஆண்டு ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தின் மறு ஆக்கமாக கடந்த 2013-ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவந்தத் திரைப்படம் தில்லுமுல்லு. நேற்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து மாபெரும் வெற்றிப்படங்கள் ஒரு காலத்தில் தொடர்ந்து மறுஆக்கம் செய்யப்பட்டன. அவற்றில் சில படங்கள் படுதோல்வியடைந்தன சில வெற்றிபெற்றன. அப்படியான படங்களின் வரிசையைப் பார்க்கலாம்.
பில்லா
மை நேம் இஸ் பில்லா என சூப்பர்ஸ்டார் ரஜினி பாடியதுபோல அவருக்கு பின்னால் பாடிவந்தார் அஜித் குமார். ரஜினிக்கும் சரி அஜித்துக்கும் சரி இருவரின் கரீயரில் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது இந்த கேங்ஸ்டர் கதை. கடந்த 2007-ஆம் ஆண்டு அஜித் குமார், நயன்தாரா, நமிதா, பிரபு, ரஹ்மான் ஆகியவர்கள் நடிப்பில் வெளியானது. இயக்குநர் விஷ்னுவர்தன் இந்தப் படத்தை இயக்கினார்.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மிரட்டலான இசையைக் கொடுத்திருந்தார். பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அடுத்த பில்லாவாக யாரை எதிர்ப்பார்க்கலாம் ?
படிக்காதவன்
ரஜினியின் படங்களை ஒரு காலத்தில் அவரது மாப்பிள்ளை தனுஷ் குத்தகைக்கு எடுத்திருந்தார் என்றே சொல்லலாம். அந்த செண்டிமெண்ட் அவருக்கு வெற்றிகளையும் கொடுத்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு தனுஷ் தமன்னா நடிப்பில் வெளியானது படிக்காதவன் திரைப்படம். கமர்ஷியலாக தனுஷிற்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது படிக்காதவன்.
பொல்லாதவன்
இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் சுவாரஸ்யமானத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். பொல்லாதவன் படத்திற்கு தொடக்கத்தில் வெற்றிமாறன் வைக்க விரும்பியப் பெயர் இரும்புகுதிரை. ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. பதிலாக தம்பிக்கு எந்த ஊரு என்கிற தலைப்பை அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். கடுப்பான வெற்றிமாறன் “அதுக்கு பொல்லாதவன் வெச்சிடலாம்” என கோபத்தில் சொன்னதை அனைவரும் சீரியஸாக எடுத்துக்கொண்டு பொல்லாதவன் என்கிற பெயருக்கு ஓகே சொல்லிவிட்டார்கள். எப்படியோ பொல்லாதவன் என்கிற பெயர் பொருத்தமானதாக இருந்து படம் வெற்றியும் பெற்றது.
மாப்பிள்ளை
தொடர்ச்சியாக ரஜினி படங்களின் தலைப்புகள் வைத்த தனுஷ் படங்கள் வெற்றிபெற அடுத்ததாக மாப்பிள்ளை படத்தை அப்படியே ரீமேக் செய்தார்கள். இரண்டுமுறை வெற்றிகளை கொடுத்த இந்த ஃபார்முலா மூன்றாவது முறையாக தோல்வியை சந்தித்தது. படத்தின் வெற்றி டைட்டிலில் இல்லை கதையில் இருக்கிறது என்பதை ஒருவழியாக புரிந்துகொண்டார் தனுஷ்.
முரட்டுக்காளை
1980 ஆம் ஆண்டு வெளியான முரட்டுக்காளை திரைப்படம் ரஜினிக்கு அடையாளம் கொடுத்தப் படங்களில் ஒன்று. பொதுவாக என் மனசு தங்கம் பாடல் வழியாக பட்டி தொட்டி எல்லாம் அசத்திய இந்தப் படத்தை 2012-ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் ரீமேக் செய்தார். அப்படி ஒரு படம் வந்ததா என்றுகூட நீங்கள் கேட்கலாம். ஆனால் வந்தது. அது பெரும் தோல்வியும் அடைந்தது.
மாவீரன்
1986-ஆம் ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படத்தின் பெயரை ஏற்கனவே ராம்சரண் நடித்தப் படத்திற்கு டைட்டிலாக வைத்திருந்தார்கள். தற்போது மீண்டும் இந்த டைட்டிலை நடிகர் சிவகார்த்திகேயனின் படத்திற்கு வைத்துள்ளார்கள். ரஜினியின் பரம ரசிகரான சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்குமா ரஜினி செண்டிமெண்ட். முக்கியமான ஒன்றும் சொல்லவேண்டும். கதை முக்கியம் அமைச்சரே.