Kamal Haasan - Projet K: ரொம்ப நாள் ஆச்சு...வெல்கம் பண்ண அமிதாப்...நெகிழ்ந்த பிரபாஸ்... கமலை வரவேற்கும் ‘ப்ராஜெக்ட் கே’ டீம்!
“வெல்கம் கமல், உங்களுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி, ரொம்ப நாள் ஆச்சு” என நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளார்.
பிரபாஸூக்கு வில்லனாகக் களமிறங்கும் நடிகர் கமல்ஹாசன்... இதுதான் கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா உலகின் இன்றைய ஹாட் டாப்பிக்!
பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமான பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் ஏற்கெனவே அமிதாப் பச்சன், தீபிகா படுகேன், திஷா பதானி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இச்சூழலில் நடிகர் கமல்ஹாசன் பிரபாஸூக்கு வில்லனாக இப்படத்தில் நடிப்பதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வந்தன. இவற்றை உறுதி செய்யும் வகையில் இன்று நடிகர் கமல் ப்ராஜெக்ட் கேவில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி கோலிவுட், டோலிவுட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் முதன்முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகர் பிரபாஸ், “என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும் தருணம். இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை, உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் உடன் ப்ராஜெக்ட் கேவில் இணைகிறேன்.
இப்படிப்பட்ட ஒருவருடன் சினிமாவில் சேர்ந்து, கற்று, வளரும் வாய்ப்பு கிடைத்துள்ளது, ஒரு கனவு நனவான தருணம்” என ட்வீட் செய்துள்ளார்.
இதேபோல் நடிகர் அமிதாப் பகிர்ந்துள்ள பதிவில், “வெல்கம் கமல், உங்களுடன் மீண்டும் பணியாற்றுவது மகிழ்ச்சி, ரொம்ப நாள் ஆச்சு” எனப் பதிவிட்டுள்ளார்.
இதே போல் படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் பகிர்ந்துள்ள பதிவில், இந்த மனிதர் ஒரு லெஜெண்ட், இந்தக் கதாதாபாத்திரத்துக்கு எங்களுக்கு இப்படிப்பட்ட லெஜெண்ட் தான் தேவைப்பட்டார். இவரிடம் இருந்து கற்று காலத்தால் அழியாத எதையாவது உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் மிகப்பெரும் ஸ்டார் நடிகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் கமல்ஹாசன், மரோ சரித்ரா தொடங்கி பல நேரடி தெலுங்கு படங்களில் இதுவரை நடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் மீண்டும் நேரடி தெலுங்கு சினிமாவில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அவரது டோலிவுட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொருபுறம் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.
மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்திலும் கமல் நடிப்பதாக ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே சமீபத்தில் இயக்குநர் ஹெச். வினோத் உடன் கமல்ஹாசன் கைக்கோர்க்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடிப்பு தாண்டி கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், கமல்ஹாசன் பிஸியாக அடுத்தடுத்த படங்கள் பற்றி அப்டேட் வழங்கி வருவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.