Dil Raju Speech: அஜித்தைவிட விஜய் தான் No 1 ஸ்டார்; தியேட்டர் கொடுக்க மாட்றாங்க.. வாரிசு பட தயாரிப்பாளர் கோபம்!
இந்த தியேட்டர் பிரச்சனையை வைத்து சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார். ஆனால் அவரது வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டில் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர் தில் ராஜு விமர்சித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. அதேபோல, போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படமும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதுவது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், திரையரங்குகள் கிடைப்பதில் வாரிசு திரைப்படத்திற்கு பிரச்சினை உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் விநியோகம் செய்த நிலையில், இந்த முறை துணிவு படத்தை விநியோகம் செய்கிறது. இதற்கான வேலைகளை 4 மாதங்களுக்கு முன்பே ரெட் ஜெயண்ட் தரப்பு தொடங்கிவிட்டது. அதேசமயம், வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிபபாளர் லலித் குமார் தமிழகத்தில் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் துணிவு படத்திற்காக அதிக தியேட்டர்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் புக் செய்துவைத்துள்ளது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த பிரச்சினையை வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு வெளிப்படையாகவே போட்டு உடைத்துள்ளார்.
விஜய்தான் நம்பர் 1 நடிகர். ஆகவே அவரது படத்திற்கு நிறைய ஸ்க்ரீன்கள் தரவேண்டும் - வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு. pic.twitter.com/mQZ8O3bWj4
— Blue Sattai Maran (@tamiltalkies) December 16, 2022
சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ள தில் ராஜு, "துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர்கள் தமிழ்நாட்டில் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை. தியேட்டர்களை சம அளவில் பிரித்து தருவதாக கூறுகிறார்கள். ஆனால், பல்வேறு தகவல்களின்படி விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். அதனால் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று உதயநிதியிடம் கேட்கப்போகிறேன்.
அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க மறுக்கின்றது. துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும். ஏனெனில் இது பிசினஸ்" என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், இது தொடர்பாக பேசுவதற்காக தில் ராஜு நேற்று சென்னை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தியேட்டர் பிரச்சினையை வைத்து சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.