(Source: ECI/ABP News/ABP Majha)
Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் பொற்காலம்.. பெருமிதம் கொண்ட கமல் ஹாசன்..
’பொன்னியின் செல்வன் 2’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் கமல் ஹாசன், பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் பொற்காலம் என குறிப்பிட்டுள்ளார்.
’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மார்ச்.29) மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘பொன்னியின் செல்வன்’. இந்த திரைப்படத்தில் கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியானது. முதல் பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 500 கோடி வசூலைக் குவித்து மாபெரும் வெற்றிபெற்றது. வயது வித்தியாசமின்றி குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் திரையரங்குகளுக்கு சென்ற ஆண்டு இந்தப் படத்தைக் காண படையெடுத்தனர்.
தொடர்ந்து இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
பொன்னியின் செல்வன் படமே கமல் ஹாசனின் காந்தக்குரல் மூலம் தான் தொடங்கும். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் “உயிரே உறவே தமிழே. எந்த அரங்கம் போனாலும் இந்த வார்த்தை மாறாது. இதே மாதிரி அன்போட அர்த்தம் தம்பி சிம்புவுக்கு தெரியும். என்னுடைய சந்தோஷத்துக்கு காரணம் கரகோஷம் மட்டுமல்ல. நல்ல கலைஞர்களுடன் பணியாற்றியதும். மணி ரத்தினத்தை பார்த்து பொறாமை கொள்பவர்களின் நானும் ஒருவன். எங்கள் இருவருக்குள் இருக்கும் பந்தம் நாயகனுக்கு முன்னாள் தொடங்கி இப்போது வரை தொடர்கிறது. நேற்றைய முன் தினம் துபாய்க்கு சென்றிருந்த போது ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே 50 இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இதனை கண்டதும் மெய்சிலிர்த்து உரைந்து போனேன். இப்படிப்பட்ட கலைஞர்கள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும்” என கூறினார்.
மேலும், ” இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் காதலா வீரமா என பட்டிமன்றம் நடந்தது. இந்த படம் எடுக்கவே ஒரு தைரியம் வேண்டும். அதை பார்க்கும் போது வீரமும், காதலும் வென்றுள்ளது. அதற்கு உதாரணம் இந்த படத்தில் இணைந்தவர்கள் தான். துரைமுருகனுக்கு எழுந்த சந்தேகம் சினிமா உலகில் பலருக்கும் எழுந்தது உண்மை. கனவு கலையாமல் முதல் பாகம் தொடந்து இரண்டாம் பாகம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இது சோழர்கள் பொற்காலம் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் பொற்காலம். அதை தூக்கிப் பிடிக்க வேண்டும். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.