பெருநகரக் காவல் சிறார் மன்றங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 'பொன்னியின் செல்வன் 2’ திரையிடல்!
சென்னையில் பெருநகரக் காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களைச் சேர்ந்த சிறார்களுக்காக 'பொன்னியின் செல்வன்-2' சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது.
சென்னை, பெருநகரக் காவல்துறையில் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்தச் சிறுமியர் - சிறுவர் மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை ஊக்கப்படுத்த பல்வேறு விளையாட்டுப்போட்டிகள், போட்டித்தேர்வு பயிற்சிகள், மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு-வருகின்றன.
இது தவிர கல்வி சுற்றுலாவாக மாணவர்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல்.29ஆம் தேதி சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் மே.9ஆம் தேது அன்று சென்னை துறைமுகத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையின் சுஜய் ரோந்துக்கப்பலை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இவற்றின் தொடர்ச்சியாக, சிறார் மன்றங்களைச் சேர்ந்த சிறுமியர் மற்றும் சிறுவர்களின் வேண்டுகோளின் பேரில் காவல் இணை ஆணையாளர் எம். மனோகரின் (மேற்குமண்டலம், சென்னை பெருநகரகாவல்) ஏற்பாட்டில் இன்று (ஜூன்.08) காலை 09.00 மணிக்கு சென்னை, மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் வரலாற்றுத் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படம் சிறப்புக்காட்சியாக சிறுவர் சிறுமியருக்கு மட்டும் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தை காவல் சிறார் மன்றத்தைச் சேர்ந்த சுமார் 200 சிறுவர் சிறுமியர்கள் கண்டுமகிழ்ந்தனர். மேலும், இத்திரைப்படத்தினை காவல் சிறார் மன்ற மாணவ மாணவிக்களுக்காக சிறப்புக்காட்சியாக ஏற்பாடு செய்து வழங்கிய அர்ச்சனா கல்பாத்திக்கு காவல் இணை ஆணையாளர் மனோகர் நினைவுப் பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சென்ற ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
வரலாற்றுப் புனைவான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது.
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கும் மேல் வசூலித்து சென்ற ஆண்டு பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில், அவ்வாறே இரண்டாம் பாகமும் வசூலிக்கும் என கோலிவுட் வட்டாரத்தினர் எதிர்பார்த்த நிலையில், இப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வசூலில் சற்றே சறுக்கியது.
இந்நிலையில், பான் இந்தியா திரைப்படமாக உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் 337 கோடிகளை வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.