All We Imagine As Light: 30 ஆண்டுகளில் கான் விழாவின் உயரிய விருதுக்குத் தேர்வான ஒரே இந்தியப் படம்.. 8 நிமிடம் கைதட்டல்கள்!
பாயல் கபாடியா இயக்கியுள்ள All We Imagine As Light திரைப்படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் 8 நிமிடம் கைதட்டி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.
சர்வதேச கான் திரைப்பட விழா 2024
சர்வதேச திரைப்பட விழாக்களில் முதன்மையான விழாவான கான் திரைப்பட விழா பிரான்சில் நடைபெற்று வருகிறது. கடந்த மே 14ஆம் தேதி தொடங்கிய இந்தத் திரைப்பட விழா இன்று மே 24ஆம் தேதி இறுதி நாளை எட்டியுள்ளது. உலகம் முழுவதில் இருந்து பல்வேறு திரைப்படங்கள் இந்த விழாவில் போட்டி பிரிவில் கலந்துகொண்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு பாலிவுட் திரைப் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டாலும் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
All We Imagine As Light
ஆவணப்பட இயக்குநரான பாயல் கபாடியா இயக்கியுள்ள All We Imagine As Light என்கிற திரைப்படம் இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவின் உயரிய விருதான Palme d’Or விருதுக்கு தேர்வாகியுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா சார்பாக கான் திரைப்படம் விழாவுக்குத் தேர்வாகியுள்ள ஒரே படம் இது. மேலும் இந்தியா சார்பாக இந்தப் பிரிவில் தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே பெண் பாயல் கபாடியா என்பது குறிப்பிடத்தக்கது. பாயல் கபாடியா இயக்கிய A Night of Knowing Nothing என்கிற ஆவணப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவின் Golden Eye விருதினை வென்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் இயக்கியுள்ள All We Imagine As Light திரைப்படம் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
மும்பையின் வாழும் இரண்டு பெண்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் திரையிடல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரியாணி படத்தின் மூலம் கவனமீர்த்த கனி குஸ்ருதி இப்படத்தில் நடித்துள்ளார். இவர் வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தலைமைச் செயலகம் வெப் சீரிஸிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை பார்வையிட்ட பார்வையாளர்கள் மொத்தம் 8 நிமிடங்கள் கைதட்டி படத்தினை கெளரவித்து உள்ளார்கள். இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் அதிக நேரம் கைதட்டல்களைப் பெற்ற படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு படத்திற்கு 30 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை
இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து பேசிய படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா இப்படி கூறியுள்ளார் “ இந்தியா பல நல்ல படங்களை உருவாக்கி வருகிறது. பாலிவுட் மட்டுமில்லை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சினிமா துறையும் தன்னளவில் சிறந்த படங்களைத் தயாரித்து வருகின்றன. எங்கள் படத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு பிறகு அங்கீகாரத்திற்காக அடுத்த 30 ஆண்டுகள் இந்தியா காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.