Pathu Thala Characters : எதிரிகள் பதுங்க... வராங்க பத்து தல கேங்... கதாபாத்திரங்களின் பெயர்கள் என்னென்ன?
'பத்து தல' திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது அதைத் தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.
கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏஜிஆர் எனும் வலுவான டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகும் இப்படத்தில் கௌதம் மேனன், கௌம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேற லெவலில் கலக்கிய ஏ.ஆர். ரஹ்மான் :
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 18ஆம் தேதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இசைப்புயலின் இசையில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்களும் ரசிகர்களை வெறித்தனத்திற்கு தீனி போட்டுள்ளன. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் இரு தினங்களில் வெளியாக இருக்கும் இப்படத்தின் கதாபாத்திரங்களின் விவரங்களை ட்விட்டர் மூலம் வெளியிட்டு வருகிறது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.
வெளியான கதாபாத்திரங்களின் பட்டியல் :
பத்து தல திரைப்படத்தில் ஆராதனாவாக பேபி ஹர்ஷிதா, இன்பன் கதாபாத்திரத்தில் சௌந்தர், தீரஜ் கதாபாத்திரத்தில் தீரஜ், அருண் மொழியாக சந்தோஷ் பிரதாப், பூங்குன்றனாக சென்ராயன், பிஸ்டோல் கதாபாத்திரமாக கண்ணன் பொன்னையா, சிங்காவாக மது குருசாமி, குட்டபாரேவாக ரெடின் கிங்சிலி, செல்வின் கதாபாத்திரத்தில் டீஜே அருணாச்சலம், அமீராக கலையரசன், நாஞ்சிலார் குணசேகரன் கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திராவாக அனு சித்தாரா, குணாவாக கௌதம் கார்த்திக் நடிக்க லீட் ரோலில் நடிக்கும் பிரியா பவானி ஷங்கர், லீலா தாம்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அட்மேன் சிலம்பரசன் ஏஜிஆர் ராவணன் கதாபத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.
கன்னட படத்தின் ரீ மேக் :
2017-ம் ஆண்டு கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் 'பத்து தல' திரைப்படம் என கூறப்படுகிறது. சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.