Parthiban: அபூர்வ சகோதரர்களுடன் வெளியாகி முதல் பட வெற்றி: இப்போ இந்தியன் 2வுடன் டீன்ஸ் ரிலீஸ்! பார்த்திபன் வெல்வாரா?
R Parthiban: பெரிய அளவில் ஸ்டார் வேல்யு இல்லாதபோதும் தனது படங்களை பெரிய பட்ஜெட் படங்களுடன் வெளியிட்டு வருகிறார் நடிகர் பார்த்திபன்.
இந்தியன் 2 உடன் மோதும் டீன்ஸ்
இரவின் நிழல் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆர் பார்த்திபன் இயக்கியுள்ள படம் டீன்ஸ். பயாஸ்கோப் மற்றும் அகிரா ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது . டி இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பி.கிருத்திகா ஐயர், கே.எஸ்.தீபன், சில்வென்ஸ்டன், உதய்பிரியன், பிரஷிதா, ரோஷன், அஸ்மிதா மகாதேவன்மோர், ரஞ்சித் தண்டபாணி, பார்த்திபன் ராதாகிருஷ்ணன், பிஞ்சி சீனிவாசன், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பதின் வயதினரை மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் டீசர் பரவலான கவனத்தைப் பெற்றது. டீன்ஸ் திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி கமலின் இந்தியன் 2 படத்துடன் மோத இருக்கிறது.
பெரிய பட்ஜெட் படங்களுடன் மோதும் பார்த்திபன்
பெரிய அளவில் ஸ்டார் வேல்யு இல்லாவிட்டாலும் தனது படங்களைத் தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களுடம் வெளியிட்டு வருகிறார் நடிகர் பார்த்திபன். பார்த்திபன் இயக்கிய முதல் படமான புதிய பாதை 1989ஆம் ஆண்டு கமல் நடித்த அபூர்வ சகோதரர்களுடம் வெளியானது. 2017 ஆம் ஆண்டு விஜய் நடித்த பைரவா படத்துடன் கோடிட்ட இடங்களை நிரப்புக, 2014 ஆம் ஆண்டு சூர்யாவின் அஞ்சான் படத்துடன் கதை திரைக்கதை வசனம் இயக்கம், 2019ஆம் ஆண்டு சூர்யாவின் காப்பான் திரைப்படத்துடன் ஒத்த செருப்பு, 2006ஆம் ஆண்டு அஜித் நடித்த திருப்பதி படத்துடன் பச்ச குதிரை ஆகிய பார்த்திபனின் திரைப்படங்கள் வெளியானது. தற்போது இந்தியன் 2 படத்துடன் டீன்ஸ் படம் வெளியாக இருக்கிறது.
பெரிய ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் தனது படத்தின் கதையை முதன்மையாக வைத்து பார்த்திபன் தனது படங்களை வெளியிடுகிறார். ஆனால் இந்தியன் 2 மாதிரியான பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்துடன் மற்ற சின்ன பட்ஜெட் படங்களும் கவனம் பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. படத்தின் கதை நன்றாகவே இருந்தாலும் அதற்கு தேவையான கவனம் கிடைக்காவிட்டால் எந்த ஒரு படைப்பாளியும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். இயக்குநர் பார்த்திபன் அதை செய்வதை முன்பே பார்த்திருக்கிறோம்.
பெரிய படங்களுடன் சிறிய படங்கள் வெளியாவதில் இருக்கும் ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால் ஒரு படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் சின்ன படங்களுக்கு டிக்கெட் எடுத்து படம் பார்ப்பவர்களும் உண்டு. அதற்கு ஏற்றபடி பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் இந்தியன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் டீன்ஸ் படத்தைப் பாருங்கள் என்று பதிவிட்டிருந்தார். மேலும் டீன்ஸ் படத்துக்கு முதல் சில நாட்களுக்கு மட்டும் 100 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தனது முதல் படமான புதிய பாதை படத்தை கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்துடன் வெளியிட்டு வெற்றி கண்டார் பார்த்திபன். தற்போது மீண்டும் வெற்றிபெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.