Mari selvaraj: “சீனை மறந்துட்டேன்; செவுட்டுலயே அடிச்சுட்டார்” - மாரி செல்வராஜ் குறித்து பகிர்ந்த பரியேறும் பெருமாள் நடிகர்
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதிரின் தந்தையாக நடித்த தங்கராஜின் பழைய நேர்காணல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படத்தை விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மாரி செல்வராஜின் பேச்சை ஆதரித்தும் விமர்சித்தும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன. தற்போது மாரி செல்வராஜை விமர்சிக்கும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கூத்துக் கலைஞர் தங்கராஜ்
பரியேறும் பெருமாள் படத்தில் பரியனுக்கு அப்பாவாக நடித்த தங்கராஜின் நேர்காணலின் பகுதி ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கூத்துக் கலைஞரான பரியனின் அப்பாவின் ஆடையை நீக்கி அவரை ஓடவிடும் காட்சி அனைவரின் மனதையும் உருக்கும் வகையிலான காட்சியாக அமைந்தது. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த தங்கராஜ் என்பவர் அந்தப் படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் தங்கராஜ் அண்மையில் உடநலக் குறைவால் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வற்புறுத்தி என்னை நடிக்க வைத்தார்கள்
”வாரம் முழுவதும் கூத்தில் நடித்துவிட்டு மீதி நேரங்களில் தோட்டத்தில் வேலை பார்ப்பது வெள்ளரிக்காய் விற்பது என சிறு சிறு தொழில்கள் செய்து வருபவன் நான். ஒரு நாள் நள்ளிரவு 12:30 மணியளவில் பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் மேலும் முப்பது பேர் அவரது படத்தில் நடிப்பதற்காக என்னை அனுகினார்கள். எனக்கு படத்தில் நடிக்க விருப்பமில்லை என நான் கூறினேன். இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னைத் தேர்வு செய்துள்ளதாக கூறி என்னை சம்மதிக்க வைத்தது படக்குழு. நடிக்க சம்மதித்தபோது படத்தில் ஆடையில்லாத ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்பது என்னிடம் தெரிவிக்கப்பட வில்லை.
ஒன்பது முறை அந்த ஷாட்ட எடுத்தாங்க
படத்தில் நிர்வானமாக நடித்த காட்சியைப் விளக்குகிறார் தங்கராஜ் “ அந்த சீனை பற்றி பேசினால் எனக்கு அழுகைதான் வருகிறது. நானும் எனது குடும்பமும் அந்த காட்சியைப் பார்க்கவில்லை. அப்படி அவமானமாக நடித்த அந்த காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. அந்த சீனில் நடித்தபோது என் மகளைப்போல் 10 பெண்கள் இருந்தார்கள். என் ஆடை விலகிக்கொள்ளாமல் இருக்க நான் எனது சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டு ஓடினேன். அந்த ஷாட்டை மட்டுமே ஒன்பது முறை எடுத்தார் மாரி செல்வராஜ். என் மகள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இனிமேல் என்னை படத்தில் நடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.’
மாரி செல்வராஜ் என்னை அறைந்துவிட்டார்
மேலும் ஒரு காட்சியில் நான் ஒரு வசனத்தை மறந்துவிட்டேன். அப்போது கோபத்தில் மாரி செல்வராஜ் என்னை அரைந்துவிட்டார். நான் வரமாட்டேன் என்று சொன்னேன், என்னை வற்புறுத்தி அழைத்து வந்து ஏன் அடிக்குறீங்க என்று அவரிடம் கேட்டேன். அப்போது என்னிடம் மன்னிப்பு கேட்டு மாரி செல்வராஜ் கண் கலங்கிவிட்டார்.” நீ கூத்துல இந்த ஊர்ல தான் ஃபேமஸ். இந்த படத்துல நல்லா நடிச்சா சாகுற வர உன்ன யாரும் மறக்கமாட்டாங்க “ என்று என்னை சமாதானப் படுத்தி நடிக்க வைத்தார் .
இந்தக் காணொளி இளையதளத்தில் பகிரப்பட்டு மாரி செல்வராஜின் நடத்தைக்காக அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள்.