Viduthalai Sigappi: பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன்! நிபந்தனை இதுதான்!
தேவைப்படும்போது காவல் துறை முன் விசாரணைக்கு ஆஜராவதற்கு நிபந்தனை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து கடவுளை இழிவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்.30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும், கவிஞருமான விக்னேஸ்வரன் எனும் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வாசித்திருந்தார்.
இந்நிலையில், இந்துக் கடவுள்களான அனுமன், சீதா, ராமர் ஆகியோரை விடுதலை சிகப்பி இழிவுபடுத்தியதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அளித்த புகாரின் பேரில் விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, இயக்குநர் பா.ரஞ்சித் தொடங்கி நெட்டிசன்கள் வரை பலரும் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேவைப்படும்போது காவல் துறை முன் விசாரணைக்கு ஆஜராவதற்கு நிபந்தனை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் விடுதலை சிகப்பி மீது பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமிழ்நாடு டிஜிபி, சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்ததாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல்,பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சுரேஷ், மேலும் சில இந்து அமைப்புகளும் விடுதலை சிகப்பி மீது புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை டேக் செய்து பா.ரஞ்சித் நேற்று ட்வீட் செய்திருந்தார். “இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று, கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி.
மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை மதப்பிரச்சனையாக்கி விடுதலை சிகப்பி மீது வழக்கு தொடுத்திருப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது.
ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.பட்டியலின விரோத கொள்கை கொண்ட பாஜக, இந்து பாசிச அமைப்புகளுக்கும், அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வழக்கு தொடுத்திருக்கும் தமிழக காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள்!" என தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பு தெரிவித்து என கலவையான விமர்சனங்கள் இணையத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.