T20 World Cup Update : T20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றிபெறுமா என்பதற்கு முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மேற்கிந்தீய தீவுகள், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் சிறு, சிறு நாடுகளும் பங்கேற்க உள்ளன. T20 போட்டி என்றாலே எந்த அணி, எப்போது வெற்றிபெறும் என்பதை கணிக்க முடியாததால் இந்த தொடருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் சம பலத்துடன் மோதும் ஆட்டமாகவே நான் கருதுகிறேன். நிச்சயமாக இரு அணிகளுக்கும் 50-50 சதவீத வாய்ப்பு உள்ளது. புள்ளிவிவரங்கள்என்பது ரசிகர்களுக்காகவும், ஊடகங்களுக்காகவும் மட்டுமே.
புள்ளிவிவரங்கள் என்பது வீரர்களுக்கானது அல்ல. அவர்கள் அதைப்பற்றி சிந்திக்கவும் மாட்டார்கள். அவரவர் தனிப்பட்ட புள்ளிவிவரங்களை பற்றி சிந்திப்பார்கள். ஒரு வீரர் குறிப்பிட்ட பந்துவீச்சாளருக்கு எதிராக மட்டும் தடுமாறுகிறார் என்றால் அது அவரது மனதில் ஓடும்.
உலகக் கோப்பையை பொறுத்தவரை பாகிஸ்தான் இந்தியாவை வென்றதே இல்லை. இந்தியா நியூசிலாந்தை வென்றதே இல்லை. இது ஒரு விஷயமே இல்லை. இந்தியாவில் நியூசிலாந்தை நிச்சயம் வீழ்த்த முடியும். இந்திய அணியில் பும்ரா, விராட்கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர். இதுபோன்று பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் இருக்கும்போது நியூசிலாந்திற்கு இந்தியாவை வீழ்த்துவது எளிதாக இருக்காது.
நியூசிலாந்து வீரர்கள் அடிபணிந்து விடுவாரகள் என்றும் நாம் சொல்ல முடியாது. அவர்கள் மிக மிக பலமாக உள்ளனர். அவர்களிடம் ட்ரென்ட் போல்ட், பெர்குசன் மற்றும் அவர்களிடம் சிறப்பான பேட்டிங் வரிசை உள்ளது. அதனால், இந்தியா நல்ல கிரிக்கெட் ஆட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை எளிதில் வீழ்த்தினாலும் நியூசிலாந்தை வீழ்த்துவதற்கு மிகவும் சிரமப்படுகிறது. கடந்த உலககோப்பை அரையிறுதியில் வில்லியம்சன் தலைமையிலான அணியிடம் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி என்று மறக்க முடியாத தோல்விகளை நியூசிலாந்து இந்தியாவிற்கு அளித்துள்ளது.
இதுவரை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக 17 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் தலா 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. 2007 மற்றும் 2015-ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் இந்தியாவும், நியூசிலாந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.
மேலும், கம்பீர் டி20 போட்டித் தொடரில் முதல் ஆட்டமே இந்தியா- பாகிஸ்தான் ஆட்டமாக உள்ளது. பாகிஸ்தான் பக்கம் பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது. இன்றைய சூழலில், பாகிஸ்தானை விட இந்திய அணியே நம்பிக்கையில் உயர்வாக இருக்கிறது. டி20 போட்டித் தொடரில் யார், யாரை வேண்டுமானாலும் தோற்கடிக்க முடியும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.