Jani Master : பாலியல் வன்கொடுமை புகார்.. தேசிய விருதுபெற்ற ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு.. பரபர தகவல்கள்..
தன்னுடன் பணியாற்றிய 21 வயது இளம் பெண்ணை படப்பிடிப்பின்போது பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
பாலியல் புகார்களில் சிக்கும் திரைத்துறையினர்
கேரளா ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து ஒட்டுமொத்த்த தென் இந்திய திரைப்படத்துறையே ஆட்டம் கண்டுள்ளது என்று சொல்லலாம். மலையாள நடிகைகள் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு ஆண்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள். மலையாள நடிகர் முகேஷ் , ஜெயசூர்யா , சித்திக் , இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கேரளாவைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் ஹேமா கமிட்டியைப் போல் ஒரு கமிட்டி அமைத்து அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகைகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தென் இந்திய தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விசாகா கமிட்டி என்கிற குழு அமைக்கப்பட்டுள்ளது. நடிகை ரோகிணி இந்த அமைப்பிற்கு தலைமையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜானி மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு
தற்போது பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புட்ட பொம்மா , மேகம் கருக்காதா , காவாலா , அரேபிக் குத்து உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களில் நடனக்கலைஞராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் மேகம் கருக்காதா பாடலுக்கு இவருக்கு சிறந்த நடனக்கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருதிற்கு இவர் முழுக்க முழுக்க தகுதியானவர் என ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் மீது 21 வயது பெண் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
படப்பிடிப்பில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார்
கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் 21 வயது பெண் ஒருவர் நடன இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் இவர் ஜானி மாஸ்டர் மீது புகாரளித்துள்ளார். சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டிய பெண் ஹைதராபத் நார்சிங்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த புகாரை நார்சிங்கி காவதுறை விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நார்சிங்கி காவல் துறையினர் ஜானி மாஸ்டர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளார்கள்.
ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றிய சதிஷ் என்பவர் சமீபத்தில் அவர் மீது புகாரளித்திருந்தது ஒரு குறிப்பிடத் தகுந்த நிகழ்வு. படப்பிடிப்பின் போது பெண்களுக்கு ஜானி மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதை தடுக்கவே நான் புகாரளித்ததாக சதீஷ் தெரிவித்திருந்தார். ஆனால் ஜானி மாஸ்டர் சதீஷ் கூறியதை பத்திரிகையாளர் சந்திப்பில் மறுத்து பேசியிருந்தார்.
பறிபோகுமா தேசிய விருது?
ஜானி மாஸ்டர் சமீபத்தில் தான் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்தார். இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்கிற கேள்வி ஒருபக்கம் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் மேகம் கருக்காதா பாடலுக்காக அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது திரும்ப பெறப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.