Women Centric movies: பெண்கள் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக்காட்டிய திரைப்படங்கள்! ஒரு சின்ன லிஸ்ட்..
"இவ்வளவுதான் வாழ்க்கை என முடங்கி கிடக்கும் பெண்களுக்கு இந்த திரைப்படங்கள் ஒரு நம்பிக்கையாக அமைந்து, இனிமேல் தான் வாழ்க்கை" என்ற எண்ணத்தை தோன்றச் செய்தது.
பெண்கள் இந்த சமூகத்தில் பிரச்சனைகளை சந்திப்பதும் அவற்றை எதிர்த்துப் போராடுவதும் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை விட சொந்த வீட்டிலேயே அவர்கள் சந்திக்கும் அவலங்கள் ஏராளம். பெண்களின் அவலங்கள் பெரும்பாலும் பொதுவெளியில் பேசப்படுவதில்லை. இதனை சமீபத்தில் வந்த படங்கள் சில வெளிச்சம் போட்டு காட்டியது. இதுவரை மறைக்கப்பட்ட பிம்பங்களை எல்லாம் உடைத்தும் எறிந்தது.
பெண்களின் பிரச்சனை என்றால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து அவளை ஹீரோ காப்பாற்றுவான் இதுவே காலம் காலமாக இருந்து வந்த மாடர்ன் சினிமா. அந்த பிம்பத்தை முழுமையாக மாற்றி உண்மையில் ஒரு பெண்ணுக்கு வீட்டிலும் தன் உறவுகளுடனும் தான் வேலை பார்க்கும் இடத்திலும் ஏற்படும் பிரச்சினைகளும்; இந்த சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் அவலங்களையும் வெளிச்சம் போட்டு காட்டின சில திரைப்படங்கள்.
தி கிரேட் இந்தியன் கிச்சன்
மலையாள இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான குடும்பத் திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்த திரைப்படம் பல விருதுகளை பெற்றது. ஒரு திருமணமான பெண்ணின் வாழ்வில் நான்கு சுவற்றுக்குள் நடக்கும் அவலத்தை மிகத் துல்லியமாக எடுத்துக் கூறியது இந்த திரைப்படம்.
ஒரு திருமணமான இளம் பெண் பல கனவுகளோடு தன் கணவன் வீட்டுக்குச் செல்கிறாள். ஆனால் அங்கு அவள் அனுபவிப்பதோ அவள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு கெட்ட கனவாக மாறியது. ஆண் வழி சமூகத்தில் பெண் என்றால் ஒரு அடிமை பொருளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இன்றும் பல குடும்பங்கள் நடைமுறையில் உள்ளன. அந்த வகையில் ஒரு படித்த பட்டதாரி பெண் திருமணத்திற்கு பிறகு தன் கணவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் வேலைக்காரியாகவும் அடிமையாகவும் வாழ நேரிடும் அவலத்தை இந்த படம் சுட்டிக் காட்டியது. மேலும் ஒரு கயிறு பெண்களின் வாழ்க்கையை மாற்ற அனுமதிப்பதா என்ற கேள்வியை அனைவர் மனதிலும் எழச் செய்தது. படத்தின் முடிவில் இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஆண்களை சிறு வயதில் இருந்தே பெண்களை மதிக்கும் வகையில் வளர்க்க வேண்டும் என்று மிக அழகாகக் கூறியுள்ளார் இயக்குநர்.
நேர்கொண்ட பார்வை
ஹச். வினோத் இயக்கத்தில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஷ்ரத்தா ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
நகரத்தில் வசிக்கும் மூன்று மாடர்ன் பெண்கள் சக ஆண்களினால் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை பேசியுள்ளது இந்த திரைப்படம். ஒரு பெண் மாடர்னாக இருந்தால் அவள் நடத்தையற்றவள் என்ற பிம்பம் நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணை துன்புறுத்தினால் அவள் மாடர்னாக இருந்தால் தப்பு அவள் மேல் தான் என்கிறது உலகம்.
மேலும் மாடர்ன் பெண்ணோ, குடும்ப பெண்ணோ, தோழியோ, காதலியோ ஏன் மனைவியாக இருந்தாலும் அவள் விரும்பவில்லை என்று சொன்னால் அவள் கருத்தை ஆண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை உரக்கச் சொன்னது இந்த திரைப்படம்.
தரமணி
விவாகரத்தான பெண் ஒருவளின் வாழ்க்கையில் இன்னொரு ஆண் நுழைகையில் அது காதலாக தான் மலர்கிறது. பின் அவன் கணவன் ஆனதும்…ஆண் என்ற கர்வம் கணவன் என்ற கர்வம் அவன் தலைக்கேறி அவளை துன்புறுத்துகிறது. மாடலாக இருக்கிறாள் என்ற ஒரே காரணத்தினால் அவரது நடத்தையை சுட்டிக்காட்டி அவளை பலவந்தப்படுத்துவது நடைமுறையில் இருக்கின்றது என்ற கருத்தையும் மேற்கோள்ளிட்டு கூறியது தரமணி திரைப்படம். ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் விவாகரத்தான தாய் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் ராம் இந்த திரைப்படத்தை இயக்கினார்.
அருவி
இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளியான திரைப்படம் அருவி. ஒரு இளம் பெண்ணுக்கு எச்.ஐ.வி ஏற்பட்டதால் அவள் தான் தப்பு செய்து இருக்கிறாள் என்று அவள் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளது குடும்பமே அவளை வெறுத்து ஒதுக்கும் அவலம். குடும்பத்தை இழந்த அந்த பெண் துணையின்றி இந்த உலகத்தில் நோயுடன் தன் இறுதி நாட்களை எப்படி கடக்கிறார் என்பதை உணர்ச்சி பொங்க சொல்லியிருந்தது அருவி படத்தின் திரைக்கதை.
காற்றின் மொழி
திருமணமான பெண் திருமணத்திற்கு பிறகு தனக்கென வாழாமல் தன் குடும்பத்திற்காக வாழும் நிலை ஏற்படுகிறது. அவளுக்கென கனவு, ஆசை தொலைந்து போகிறது. திருமணமான பெண்ணுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருக்கக் கூடாதா… திருமணத்திற்கு பிறகு பெண்ணால் சாதிக்க முடியாதா என்ற கோணங்களில் யோசிக்க வைத்தது இந்த திரைப்படம். ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியானது இந்த திரைப்படம்.
இவ்வாறு பெண்கள் சிறுமியாக, இளம் பெண்ணாக, இளம் மனைவியாக, குடும்பத் தலைவியாக… என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு இன்னல்களையும் இச்சமூகத்தில் சந்திக்க நேரிடுகிறது. சமூகத்தினரால் ஏற்படும் அவலங்களை விட தன் சொந்த உறவுகளாலும் பல அவலங்கள் அவர்களுக்கு நேர்கிறது என்பதை சுட்டிக்காட்டி பெண்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டியது இந்த திரைப்படங்கள்.
"இவ்வளவுதான் வாழ்க்கை என முடங்கி கிடக்கும் பெண்களுக்கு இந்த திரைப்படங்கள் ஒரு நம்பிக்கையாக அமைந்து, இனிமேல் தான் வாழ்க்கை" என்ற எண்ணத்தை தோன்றச் செய்தது.