Famous Biopic: இளையராஜாவின் ஃபேவரைட்.. ஆளுமைகளின் வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஓர் பார்வை..!
வரலாற்றில் புகழ்பெற்ற பல்வேறு ஆளுமைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அணு ஆயுதத்தைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானியான ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ஓப்பன்ஹெய்மர் என்கிற வரலாற்று ஆளுமையை மக்களிடையே கொண்டு சேர்த்து அவரைப் பற்றிய விவாதங்களை தொடங்கிவைத்திருக்கிறது இந்தப் படம். இதே வகையிலான வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
த தியரி ஆஃப் எவ்ரிதிங் ( The Theory of everything)
மற்றொரு புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளிவந்த படம்தான் தியரி ஆஃப் எவ்ரிதிங். ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இளமை கால வாழ்க்கை, இயக்க நரம்பணு நோயினால் பாதிக்கப்பட்டது மற்றும் தனது மனைவியின் உதவியுடன் போராடி கருந்துளை பற்றிய மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்திய கதையை உணர்வுப்பூர்வமாக காட்டும் படம். ஜேம்ஸ் மார்ஸ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
மால்கம் எக்ஸ் (Malcolm x)
கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான மால்கம் எக்ஸின் சுயசரிதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மால்கம் எக்ஸ். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் கருப்பின மக்களின் விடுதலைக்காக ப்ளாக பாந்தர் என்கிற ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்பை உருவாக்கினார் மால்கம். அமெரிக்க குடிமகனைப் போல வாழ விரும்பும் ஒரு இளைஞனாக இருந்த மால்கம் இவ்வளவுப் பெரிய இயக்கத்தை உருவாக்கிய கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார் இயக்குநர் ஸ்பைக் லீ. இதே வரிசையில் நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் என எத்தனையோ தலைவர்கள் பற்றிய முக்கியமான படங்கள் வெளியாகி இருக்கின்றன அவற்றில் மிக முக்கியமான ஒரு படம் இது.
அமேடியஸ்
இசைஞானி இளையராஜா வியந்து பேசிய ஒரே படம் அமேடியஸாகதான் இருக்கும். ஏனென்றால் அது இளையராஜா தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட இசைமேதையான மோஸார்ட்டின் வாழ்க்கையைப் பற்றிய படம். மோஸார்ட் மட்டுமில்லாமல் மோஸார்ட்டின் காலத்தில் அவருடன் இருந்த மற்றொருவரின் பார்வையில் இருந்து மோஸார்ட்டின் மேதமையை நாம் பாக்கலாம். ஹாலிவுட்டின் பல முக்கியமான படங்களை இயக்கிய மிலோஸ் ஃபார்மன் இந்தப் படத்தை இயக்கியிருப்பார். உங்களுக்கு இளையராஜா பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் படத்தை நீங்கள் தவற விடக் கூடாது.
காந்தி
அனேகமாக இந்த வரிசையில் இடம்பெறும் ஒரே இந்தியத் தலைவரைப் பற்றிய படம். அதுவும் ஒரு மேற்கு நாட்டைச் சேர்ந்தவர் இயக்கியது. அம்பேத்கர் , பெரியார் ஆகிய முக்கியமான தலைவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படங்கள் வெளி வந்திருக்கின்றன என்றாலும் அவை முழுவதுமான ஒரு கலைப்படைப்பாக உருவாகினவா என்கிற கேள்வி இருந்து வருகிறது. ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய காந்தி திரைப்படம் நிச்சயம் காந்தியைப் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை நமக்கு அளிக்க முயல்கிறது. இனி வரும் காலங்களில் நமது இந்தியத் தலைவர்களின் வாழ்க்கை கலைத்தன்மையுடன் நிச்சயம் எடுக்கப்படும் என்று நாம் தாராளமாக நம்பலாம். அதற்கு தகுதியான படைப்பாளிகளும் திரையுலகில் இருக்கிறார்கள்.