Year Ender 2022: விக்ரம் முதல் ஆர்.ஆர்.ஆர் வரை.... 2022இல் பெரும் பொருட்செலவில் உருவான இந்தியப் படங்கள்!
2 ஆண்டுகள் கழித்து 2022இல் முழு வீரியத்துடன் மெகா பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் மீண்டும் கோலோச்சத் தொடங்கின.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா இந்திய திரைத்துறையையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா சூழலில் ஒரு பக்கம் ஓடிடி தளங்கள் மூலம் சிறு பட்ஜெட் படங்கள் வளர்ந்து ஆரோக்கியமான சூழல் உருவெடுத்த நிலையில், மற்றொரு புறம் திரையரங்குகள் முடங்கின.
இந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து 2022இல் முழு வீரியத்துடன் மெகா பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் மீண்டும் கோலோச்சத் தொடங்கின.
நடிகர்கள், படக்குழுவினரின் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவுகள் முதல் சந்தைப்படுத்தல், வெள்ளித்திரையை வந்தடையும் படத்தின் இறுதி வடிவம் வரை ஹாலிவுட்டை நெருங்கும் வகையில் கோடிகளில் புரளும் வணிகம் இந்திய சினிமாக்களை புதிய தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டு பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய, ஏமாற்றிய படங்களைப் பார்க்கலாம்.
வலிமை:
150 கோடி. அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு பிப்ரவரி.24 வெளியான வலிமை படம், 232.80 கோடி வசூலை அள்ளியது.
பீஸ்ட்:
விஜய் - நெல்சன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ வெளியானது. 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றபோதும், 237 கோடி ரூபாய் வசூலித்து வணிக வெற்றி பெற்றது.
ஆர்.ஆர்.ஆர்:
550 கோடி பட்ஜெட்டில் வெளியான ராஜமவுலி இயக்கத்தில் டோலிவுட்டின் டாப் ஸ்டார்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியானது. உலகம் முழுவதும் 1200 கோடி வசூலை வாரி சுருட்டி பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக இப்படம் உருவெடுத்துள்ளது.
விக்ரம்:
கமல் ஹாசன், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி கோலிவுட்டில் வசூல் வேட்டை நடத்திய படம் ‘விக்ரம்’. 120 கோடி பட்ஜெட்டில் இந்த ஆண்டு மத்தியில் வெளியான ‘விக்ரம்’ 410 கோடி ரூபாய் வசூலித்து கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமாக இந்த ஆண்டு உருவெடுத்துள்ளது.
கேஜிஎஃப் 2:
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான கேஜிஎஃப் 2 இந்த ஆண்டு நிகழ்த்தியது வரலாறு. கன்னட சினிமாவின் மார்க்கெட்டை திருப்பி போட்ட கேஜிஎஃப் 2 மொத்தம் 1200 கோடி ரூபாய் வசூலித்து இந்த ஆண்டு அதிகம் வசூலித்த இந்தியப் படமாக சாதனை படைத்துள்ளது. மேலும் இதுவரை அதிகம் வசூலித்த இந்திய சினிமாக்களில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
லால் சிங் சத்தா:
180 கோடி செலவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லால் சிங் சத்தா படம் 129.64 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து தோல்வியைத் தழுவியது.
ஆஸ்கார் வென்ற ’ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்கான ‘லால் சிங் சத்தா’ நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றும், ‘பாய்காட் பாலிவுட்’ ஹேஷ்டேக் போன்ற சமூக வலைதள பிரச்சாரங்களில் சிக்கி தோல்வியைத் தழுவியது.
பொன்னியின் செல்வன்:
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி 250 கோடி பட்ஜெட்டில் உருவான மணிரத்னத்தின் கனவுப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உலகம் முழுவதும் 496 கோடி வசூலித்துள்ளது.2023இல் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாஸ்திரா பார்ட் ஒன்:
ட்ரையாலஜியாக உருவாகும் இந்தப் படத்துக்கு 400 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக 60 கோடி ஒதுக்கப்பட்டது.
அக்டோபர் மாதம் வெளியான பிரம்மாஸ்திரா முதல் பாகம் இதுவரை 431 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால் பிரமாஸ்திரா வெற்றிப்படம் அல்ல என்றும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும் கிசுகிசுத்து வருகின்றன பாலிவுட் வட்டாரங்கள்.
விக்ரம் வேதா (இந்தி):
175 கோடியில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட விக்ரம் வேதா படம் 135.03 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியைத் தழுவியது. பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும், யூடியூப் தளத்தில் இருக்கும் விக்ரம் வேதா இந்தி டப்பிங்கும் இப்பட வசூலை பாதித்ததாகக் கூறப்பட்டது.
சாம்ராட் பிருத்விராஜ்:
பாலிவுட் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அக்ஷய் குமார் 150 கோடி ரூபாயில் தயாரான சாம்ராட் பிருத்விராஜ் 90.32 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து தோல்வியைத் தழுவியது.
ஷம்ஷேரா:
100 கோடி பட்ஜெட்டில் உருவான ஷம்ஷேரா 63. 58 கோடி மட்டுமே வசூலித்து பாலிவுட்டில் மற்றுமொரு தோல்விப்படமாக உருவெடுத்தது.