Marvel: எங்ககிட்ட 80 வருஷத்துக்கான கதை இருக்கு.. யாருக்கும் சளைக்காது - மார்வெல் நாயகன் கெவின் பேகி அதிரடி
சூப்பர் ஹீரோக்கள் தொடர்பான கதைகள் ரசிகர்களுக்கு எப்போதும் சளைக்காது என, மார்வெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் பேகி தெரிவித்துள்ளார்.
மார்வெல்:
உலகிற்கு வரும் ஆபத்துகளை சூப்பர் ஹீரோக்களை கொண்டு தடுப்பதை மட்டுமே, முக்கிய கதைக்களமாக கொண்டு மார்வெல் நிறுவனம் தனக்கென ஒரு தனி திரையுலகை கட்டமைத்துள்ளது. இதுதொடர்பான படங்களில் இடம்பெறும் பிரமாண்ட காட்சிகளால் வியக்க வைத்து, உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் படங்கள், சர்வ சாதாரணமாக சில ஆயிரம் கோடிகளை வசூலாக குவித்து வருகின்றன. மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரூ.22 ஆயிரம் கோடியை வசூலித்து, அவதாரை அடுத்து உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் எனும் பெருமையையும் பெற்றது. மாபெரும் சறுக்கலில் இருந்து மார்வெல் நிறுவனம், தற்போது விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கு முக்கிய காரணம், அதன் தலைமை செயல் அதிகாரியான கெவின் பேகி தான். மார்வெல் எப்படி தனது பயணத்தை தொடங்கி, எதை நோக்கி பயணிக்க வேண்டும் என அனைத்தையும், வடிவமைத்து, தற்போது இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் இவர் தான்.
கெவின் பேகி பேட்டி:
அண்மையில் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவரிடம், இன்னும் சூப்பர் ஹீரோக்களுக்கான காலம் எத்தனை காலங்களுக்கு நீடிக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கெவின் பேகி, மார்வெல் காமிக்ஸில் 80 வருட அடிப்படை கதைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை வெவ்வேறு வகைகளுக்கு மாற்றியமைக்க முடியும். நான் 22 ஆண்டுகளுக்கும் மேலாக மார்வெல் ஸ்டுடியோவில் இருக்கிறேன். இங்கு பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் ஒரு தசாப்தம் அல்லது அதற்கும் மேலாக ஊழியர்களாக உள்ளனர்.
ரசிகர்களுக்கு சளைக்காது:
புத்தகங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களில் பார்வையாளர்கள் சோர்ந்து போவார்கள் என்று நினைக்கிறீர்களா?' நீங்கள் அதை ஒருபோதும் கேட்க மாட்டீர்கள், ஏனென்றால் ஒரு புத்தகம் எதுவாகவும் இருக்கலாம் என்று பெரும்பாலான மக்களிடையே உள்ளார்ந்த புரிதல் உள்ளது. ஒரு நாவல் எந்த வகையான கதையையும் கொண்டிருக்கலாம். எனவே நீங்கள் எந்தக் கதையை மொழிபெயர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பார்வை மாறுபடும், கதையும் புதுமையாக இருக்கும். காமிக் வாசகர்கள் அல்லாதோருக்கு, மார்வெல்லின் திரைப்படங்களும் அப்படி பட்டது தான்.
80 ஆண்டுகளுக்கான கதை இருக்கு:
மார்வெல் காமிக்ஸில் 80 ஆண்டுகள் மிகவும் சுவாரஸ்யமான, உணர்ச்சிகரமான, அற்புதமான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் நம்மிடம் இருப்பதை எடுத்து அவற்றை மாற்றியமைப்பது எங்கள் பெரிய பாக்கியம். அதைச் செய்வதற்கான மற்றொரு வழி, அவற்றை வெவ்வேறு வகைகளில் மாற்றியமைப்பது மற்றும் நாங்கள் எந்த வகையான திரைப்படங்களை உருவாக்க விரும்புகிறோம் என்பதை பொருத்தது” என கெவின் பேகி விளக்கமளித்துள்ளார்.
ஆண்ட் - மேன் 3
இதன் மூலம் இன்னும் பல ஆண்டுகளுக்கு மார்வெல் தரப்பில் இருந்து, ஏகப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக, அடுத்த மாதம் 17ம் தேதி, ஆண்ட் மேன் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அடுத்த அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான, அடித்தளத்தை இந்த திரைப்படம் அமைக்க உள்ளதால் ஆண்ட் மேன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.