Vaazhai Box Office: நல்ல கதை தான் சார் கிங்.. மாரி செல்வராஜின் வாழை வசூல் தெரியுமா?
மாரி செல்வராஜ் இயக்கி கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியான வாழை படம் உலகளவில் 14 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
வாழை
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.
வாழை படம் பார்த்து கலங்கிய நட்சத்திரங்கள்
தனது சிறு வயதில் நிக்ழந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெகுஜன மக்கள் தொடர்புபடுத்திக் கொண்டு பார்க்கும் வகையில் இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் தீவிரமான அரசியை பெரிய ஸ்டார் நடிகர்களை கொண்டு பேசின. ஆனால் வாழை படத்தில் தனது ஊரைச் சேர்ந்த மக்களை அவர்களின் மண்ணில் வைத்து நடிக்க வைத்திருப்பதே இப்படத்தின் பெரிய பலமாக பார்க்கப் படுகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
வாழை பட வசூல்
பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியீடும் சாக்னிக் தளம் வாழை படத்தின் வசூல் நிலவரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அதன் அடி 'வாழை' படம் வெளியான முதல் நாளே வசூலில் பின்னி எடுத்தது. முதல் நாளில் மட்டும் 1.15 கோடிகளை வசூலித்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த நாட்களில் 2.50 கோடி, 4 கோடி என்ன பட்டையை கிளப்பி நான்கே நாட்களில் 8 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. தற்போது படம் வெளியாகி ஐந்து நாட்கள் நிறைவடையும் நிலையில் உலகளவில் இப்படம் 14.5 கோடியும் இந்தியளவில் 11.74 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாழை படத்தின் சிறப்பு திரையிடல் முதல் படம் திரையரங்குகளில் வெளியானது வரை பல்வேறு திரைப்பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இயக்குநர் பாலா , மணிரத்னம் , பிரதீப் ரங்கநாதன் , விக்னேஷ் சிவன் , நடிகர் சூரி , கார்த்தி , இசையமைப்பாள ஜிப்ரான் , விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் , இயக்குநர் நெல்சன் , மிஸ்கின் , ராம் , வெற்றிமாறன் , என இந்த வரிசை நீண்டு கொண்டே போகும்.
இந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்களைக் காட்டிலும் சின்ன பட்ஜெட்டில் உருவான படங்களே அதிக வசூலை ஈட்டியுள்ளன. அந்த வரிசையில் தற்போது வாழை படமும் இணைந்துள்ளது.