Thug Life Kamal Haasan: யகூசா.. தேடி வரும் காலன்.. ரங்கராய சக்திவேல் நாயக்கர்.. கமலின் 'தக் லைஃப்' வீடியோ எப்படி?
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தல் லைஃப் படத்தின் டைட்டில் வீடியோவில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
KH234
நாயகன் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் மற்றும் கமல் மீண்டும் இணைவதற்கு சுமார் 35 ஆண்டுகள் கடந்துள்ளன. கமலின் 234 ஆவது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்கிற தகவல் இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் - மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க, ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
நடிகர்கள்
கமல்ஹாசன் தவிர்த்து இந்தப் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானும் த்ரிஷாவும் நடிக்க இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்ததைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்க இருக்கிறார்.
ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய மணிரத்னத்தின் படங்களில் நடித்த த்ரிஷா, தற்போது மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர்களைத் தவிர்த்து பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்த நடிகர் ஜெயம் ரவியும் இந்தப் படக்குழுவில் இணைந்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
டைட்டில்
நாளை கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்தப் படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளது படக்குழு. அலைபாயுதே, செக்கச் சிவந்த வானம், ஆயுத எழுத்து என்று மணிரத்னம் படங்களின் டைட்டில்களுக்கு எப்போதும் ஒரு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
அதே மாதிரியான டைட்டிலை இந்த முறையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது தக் லைஃப் என்கிற இந்தப் படத்தின் டைட்டில். அதிரடியான தற்காப்பு கலைகளால் நிறைந்திருக்கும் இந்த வீடியோவின் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவில் கமல்ஹாசன் “என் பெயர் ரங்கராயன் சக்திவேல் நாயக்கன்... காயல்பட்டினத்துக் காரன். நான் பிறந்தப்போவே ரங்கராயன் சக்திவேல் நாயக்கன் கிரிமினல், குண்டா, யகுஸா அப்டி பேரு வெச்சிட்டாங்க... யகுஸானா ஜப்பானிய மொழியில் கேங்ஸ்டர்னு அர்த்தம்” என்று பேசுகிறார்.
கமல் இயக்கவிருந்து பின் கைவிடப்பட்ட மருதநாயகம் படத்தின் லுக்கில் இந்த வீடியோவில் கமல் வருகிறார். அதே நேரத்தில் நாயகன் படத்தில் தன்னுடைய பெயரான சக்திவேல் நாயக்கன் என்கிற பெயர் இந்தப் படத்திலும் அவருக்கு வைக்கப்பட்டிருப்பது இந்தப் படத்தின் கதை பற்றிய குழப்பங்களை உருவாக்கி இருக்கிறது. மேலும் பாரதியாரின் கவிதையான காலனுக்கு உரைத்தல் என்கிற கவிதையின் சாராம்சமாக
”காலன் என்ன தேடி வரது இது ஒன்னும் முதல் முறையில்ல.. அதேமாதிரி கடைசிமுறையும் இல்லை...” என்கிற வசனத்தைப் பேசுகிறார். வித்தியாசமான இந்த அறிமுகத்தால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.