"பாலியல் தொல்லையா.. போலீசுல புகார் கொடுங்க... சினிமா சங்கத்துல நீதி கிடைக்காது.." மலையாள நடிகை சுவாசிகா..!
நடிகை சுவாசிகா மலையாள திரையுலகில் இருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து கடுமையாக பேட்டியளித்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எங்கும் தலைவிரித்து ஆடுகிறது. அப்படி இருக்கையில் திரையுலகில் மட்டும் இருக்காதா என்ன? அப்படி திரையுலகில் இருக்கும் பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சுவாசிகா.
தமிழில் அறிமுகம் :
தமிழில் மைதானம், சோக்காளி, அப்புச்சி கிராமம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சுவாசிகா தமிழில் அறிமுகமானது கோரிப்பாளையம் திரைப்படம் மூலம் தான். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து மிகவும் வெளிப்படையாக தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.
தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை :
சின்னத்திரையில் தொடங்கிய நடிகை சுவாசிக்காவின் பயணம் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் மலையாள திரையுலகம் பக்கம் நுழைந்தவருக்கு அங்கு வாய்ப்புகள் குவிய மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். மம்மூட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் சிபிஐ 5ம் பாகம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
View this post on Instagram
திரையுலகில் பெண்கள் பாதுகாப்பு சங்கம் :
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பதாக இளம் நடிகைகள் மற்றும் முன்னணி நடிகைகள் பலரும் புகார்கள் கொடுத்த வண்ணமாக உள்ளனர். படத்தில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் படுக்கைக்கு வந்தால் தான் கிடைக்கும் என கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற காரணத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு அவசியம் என்பதால் பாதுகாப்பு சங்கம் ஒன்றை சில முன்னணி நடிகைகள் சேர்ந்து தொடங்கியுள்ளனர்.
சுவாசிகாவின் கடுமையான பேட்டி :
இந்த பிரச்சனை குறித்து நடிகை சுவாசிகா தெரிவிக்கையில் "பெண்களுக்கு மலையாள திரையுலகில் எந்த விதமான தொல்லையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள். இங்கு யாரும் பெண்களை கட்டுப்படுத்துவதில்லை. அதையும் மீறி தவறான எண்ணத்தில் யாராவது அணுகினால் மகளிர் ஆணையத்திலோ அல்லது காவல் நிலையங்களிலோ புகார் கொடுக்கலாம். அதை விடுத்து சினிமா சார்ந்த பெண்கள் பாதுகாப்பு சங்கத்தில் புகார் கொடுக்க எந்த அவசியமும் இல்லை. அவர்கள் மூலம் அணுகினால் நீதி கிடைக்கும் என்பதில் எந்த உறுதிப்பாடும் இல்லை." இவ்வாறு அவர் கூறினார். நடிகை சுவாசிகாவின் இந்த கடுமையான பேட்டி மலையாள திரையுலகை அதிர்ச்சியை கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.