'மெட்டுக்குள் அடங்கும் வரிகள் , மூன்று தலைமுறை கொண்டாடும் கவிஞர்' - பிறைசூடன் பிறந்தநாள் இன்று!
ஒரு பாடலின் வரிகளில் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் , அதே அர்த்தமுள்ள வேறு சொற்களை பயன்படுத்தும் தமிழின் வித்தை தெரிந்தவர்.
’மங்கலமான வரிகள் கொண்ட திரைப்பாடல்களும் இலக்கியமே ‘ என கூறிய , கம்பீர கவிஞர் பிறை சூடனின் பிறந்தநாள் இன்று. 1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே , தமிழ் மீதும் இலக்கியங்கள் மீதும் தீரா பற்று கொண்டவராக இருந்தவர். முதன் முதலாக 1985ஆம் ஆண்டு வெளியான சிறை என்னும் படத்தில் இடம்பெற்ற , ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னு பாடலை எழுதியதன் மூலம் புகழ்பெற்றவர். இந்த பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அதன் பிறகு இசைஞானியின் மெட்டுகளுக்கு அலங்காரம் செய்ய தொடங்கினார். அதன் பிறகு தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் என அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் தொடர்ந்து பணியாற்றினார்.
’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றாய்’ என்னு பாடல்தான் இசைஞானிக்கு எழுதிய முதல் பாடல். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ என் காதல் ஏக்கப் பாடலை எழுதினார். ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா’ என்னும் பாடல் இவரின் கவி எழுத்தின் வேகத்திற்கு ஒரு சான்று என்றால் மிகையில்லை. பட்டி தொட்டியெங்கும் இன்றும் திருமணங்களில் ஒலிக்கும்” நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் “ என்னும் பாடலை சொல்லலாம் . “ புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும் , பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்..மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கனும் மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு...சொத்து வீடு வாசல் இருந்தாலும் சொந்த பந்தம் எல்லாம் அமைஞ்சாலும் உள்ளம் ரெண்டு ஒட்டாவிட்டால் கல்யாணம்தான் கசக்கும் “ என்னும் அர்த்தமுள்ள வரிகளை கொடுத்தவர். அதுமட்டுமல்ல அமரன் திரைப்படத்தின் ‘வெத்தலை போட்ட சோக்குல’, ‘சந்திரனே சூரியனே’ போன்ற பாடல்கள் இன்றளவும் பிரபலம்.
இசையமைப்பாளர் ஒரு மெட்டமைத்து கொடுத்தால் , அந்த மெட்டுக்குள் அடங்கும் அழகான வரிகளை ஆழமான கருத்துகளோடும் , படத்தின் கதையோடு இயந்தவாரும் இசையமைப்பதில் கெட்டிக்காரர் பிறை சூடன். அதுமட்டுமல்ல , ஒரு பாடலின் வரிகளில் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் , அதே அர்த்தமுள்ள வேறு சொற்களை பயன்படுத்தும் வித்தை தெரிந்தவர்.
பிறை சூடனின் இதுவரையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். தவிர கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கு மேல் பக்தி பாடல்கள் , தொலைக்காட்சி தொடருக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். மூன்று முறை தமிழக அரசின் சிறந்த கவிஞருக்கான விருதை பெற்றுள்ளார். திரைப்பட சங்கம் இவரை ‘கலைச்செல்வம்’ என்ற விருதை வழங்கியும் கௌரவித்தது.
இலக்கிய ஞானம் அதிகம் உள்ளவர். பல சித்தர்களின் பாடல்களை எப்போது கேட்டாலும் அடி பிறழாமல் , தயக்கம் இல்லாமல் சொல்லும் திறமைக்காரர் .கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த பிறை சூடன் அவர்கள் தனது 65 வயதில் , கடந்த 2021 அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார். பிறை சூடன் என்றும் அவரின் கவி சூடிய பாடல்களால் எங்கும் நீக்கமர நிறைந்திருப்பார்.