LEO Success Meet:‘விரைவில் தளபதி அரசியல்’ .. முதல்வனாக மாறிய அர்ஜூன்.. விஜய் சொன்ன அந்த ஒத்த வார்த்தை..!
LEO Success Meet: நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்தார்.
லியோ படம் 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலை பெற்றுள்ள நிலையில் அப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டாரங்கில் இன்று (நவம்பர் 1) நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜூன்,ஜனனி, மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன், ‘இதற்கு முன்னால் மக்கள் என்னைப் பார்க்கும்போது ஜெய்ஹிந்த் என கூறினார்கள். இப்போது என்னிடம் “தெரிக்க” என சொல்கிறார்கள்.
த்ரிஷாவுடன் நான் முதல் முறையாக மங்காத்தா படத்தின் நடித்த நிலையில், இரண்டாவது படமாக லியோ உருவானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் சிறப்பாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முக்கிய தூணாக உள்ள நடிகர் விஜய், இந்திய சினிமாவின் மிகப்பெரிய நபர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நான் பார்த்த சிறந்த நேரம் தவறாத மனிதராக விஜய் உள்ளார். அவரின் அமைதி தான் விஜய்க்கான ஆயுதம். தலைவர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் விஜய்யிடம் உள்ளது. அவர் விரைவில் அரசியலில் வருவார்” என கூறினார்.
தொடர்ந்து முதல்வன் படத்தில் தான் நடித்த நிருபர் கேரக்டராக புகழேந்தியாக மாறி விஜய்யிடம், ‘நீங்கள் விஜய்யாக இருப்பது ஈஸியா? கஷ்டமா?” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய், ‘வெளியில் இருந்து பார்க்கிறவர்களுக்கு வேண்டுமானால் கஷ்டமாக தெரியலாம். ஆனால் எனக்கு அது ஈஸி தான். அதற்கு காரணம் இங்கு இருக்கும் ரசிகர்கள் தான்’ என சொன்னார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.