Leo: லியோ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் இருக்குமா..? ஆர்வத்தில் ரசிகர்கள்.. உற்றுநோக்கும் அரசியல் கட்சிகள்..!
விஜய் மக்கள் இயக்கம் வலுபெற்றிருக்கும் இந்த முக்கியக் காலக்கட்டத்தில் நடைபெற உள்ள லியோ இசை வெளியீட்டு விழா எப்படி இருக்கப் போகிறது? என்பதே சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
லியோ ரிலீஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெளியீட்டை கோலிவுட் திரையுலகமே எதிர்நோக்கி உள்ளது.
‘லியோ’ பட பூஜை அன்றே அக்.19 படம் வெளியாகும் என தேதி குறிக்கப்பட்டு டைட்டில் வீடியோ வெளியானது. அதை நோக்கியே பெரும் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட ஒட்டுமொத்த படக்குழுவும் ஜெட் வேகத்தில் பணியாற்றிய நிலையில், காஷ்மீர், சென்னை என படப்பிடிப்பு தொடர்ந்தது. கடந்த ஜூலை மாதம் மத்தியில் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே லியோ படத்தின் ‘நா ரெடி’ தான் பாடல் வெளியாகி வரவேற்பையும், அதே சமயம் மது குடிப்பது பற்றிய வரிகள்,விஜய் சிகரெட் பிடித்தது ஆகியவற்றுக்காக விமர்சனங்களையும் பெற்று, சென்சாரில் சில வரிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், படத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வரிசையாக வெளியாகும் என தயாரிப்பாளர் லலித் குமார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
விஜய் ரசிகர்களை சந்திக்கும் ஒரே விழா
இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.30 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வழக்கமாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா அவரது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் கொண்டாட்ட நிகழ்வாக களைகட்டும் நிலையில், அவரது முந்தைய இசை வெளியீட்டு விழாவான வாரிசு விழா முன்னெப்போதும் இல்லாத வகையில் பேசுபொருளானது.
பொதுவாக பட விழாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது விழாக்களில் அவ்வளவு எளிதாக கலந்துகொள்ளாத விஜய், தன் பட ஆடியோ விழாக்களில் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடுவதும், குட்டி கதை சொல்வதும் ஒவ்வொரு முறையும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் லியோ இசை வெளியீட்டு விழாவை பெரிதும் எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.
அரசியல் பாதை, விஜய் மக்கள் இயக்கம்
மற்றொருபுறம் தன் ரசிகர்கள் அடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றவும், அரசியலில் கால் பதிக்கவும் விஜய் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் பரவி வரும் சூழலில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி உதவித் தொகை, விஜய் பயிலகம் என சேவைகள் ஒருபுறமும், வழக்கறிஞர் அணி, ஐடி அணி என ஆலோசனைக்கூட்டங்கள் மறுபுறமும் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், இயக்கத்தின் அடுத்தகட்ட அரசியல் நிகழ்வு பற்றி அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் இருக்குமா?
விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் அவரது அரசியல் வருகை ஆகியவற்றுக்கு செக் வைக்கும் வகையில் தான், சென்ற ஆண்டு விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவான பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தயாரிப்பு நிறுவனம் நோ சொன்னதாக ஏற்கனவே கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் வலுபெற்றிருக்கும் இந்த முக்கியக் காலக்கட்டத்தில் நடைபெற உள்ள லியோ இசை வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழா என்பதைத் தாண்டி முக்கிய மேடையாக விஜய்க்கு அமையுமா? என சினிமா அரசியல் வட்டாரத்தினர் எதிர்நோக்கி காத்துள்ளனர்.