கொண்டாட்டத்தில் கோலிவுட்! ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் அந்த 3 படங்கள் இதுதான்!
மெய்யழகன், ஹிட்லர், தேவாரா, பேட்டா ராப் என தமிழில் இன்று புதுப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகிற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொண்டாட்டமான நாள் ஆகும். அந்த வகையில், இந்த வெள்ளிக்கிழமை தமிழ் திரையுலகிற்கு ஒரு விருந்தான வாரமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான லப்பர் பந்து, கோழிப்பண்ணை செல்லதுரை, நந்தன் படங்கள் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் இன்று கார்த்திக் – அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன், ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா, விஜய் ஆண்டனியின் ஹிட்லர், சதீஷின் சட்டம் என் கையில், பிரபுதேவாவின் பேட்ட ராப், விஜய் சத்யாவின் தில் ராஜா ஆகிய படங்கள் வெளியாகிறது.
இதில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 3 படங்களே ஆகும்.
மெய்யழகன்:
96 படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள படம் மெய்யழகன். முழுக்க முழுக்க மென்மையான கதைக்களத்தில் கார்த்தியின் வெள்ளந்தியான குணம், சொந்த ஊருக்கு வரும் அரவிந்த் சுவாமியின் பரிதவிப்புகளை படமாக்கியுள்ளார் இயக்குனர். படத்தின் டீசரும், ட்ரெயிலரும் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஹிட்லர்:
இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உலா வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், இவர் நடிப்பில் இன்று வெளியாகும் படம் ஹிட்லர், சர்வாதிகாரத்திற்கு எதிரான கருத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். விவேக் –மெர்வின் இசையமைத்துள்ளனர். விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் பெரிய வெற்றி பெறாத சூழலில் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேவாரா:
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். அவருக்கு என்று அந்த மாநிலத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இந்தியா முழுவதும் உருவாகியுள்ளனர். தமிழிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த படம் தமிழில் இங்கு வெளியாகிறது. கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, கன்னடத்திலும் இந்த படம் வெளியாகிறது. சயீப் அலிகான் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படங்கள் மட்டுமின்றி பிரபுதேவாவின் பேட்ட ராப் படத்திற்கும், சதீஷின் சட்டம் என் கையில் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. பேட்ட ராப் படத்தை எஸ்.ஜே,சினு இயக்கியுள்ளார். சட்டம் என் கையில் படத்தை சச்சி இயக்கியுள்ளார்.