தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட கிங்டம் படக்குழு.. மன்னிப்பு கேட்டு அறிக்கை!
கிங்டம் படத்தில் தமிழீழ மக்களை இழிவுப்படுத்தியிருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வசூல் சாதனை படத்து வருகிறது. படம் வெளியான இரண்டாவது நாளே 60 கோடி வசூலை ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், இப்படத்தில் தமிழிழ மக்களை இழிவுப்படுத்தியிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கிங்டம் திரையிட்ட தியேட்டர்களை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். மேலும், தமிழகம் முழுவதும் இப்படத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அரசியல் தலைவர்களும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
கிங்டம் படத்திற்கான எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக சித்தாரா என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிங்டம் படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாகக் கேள்விப்பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது எனப் படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்.
அதனையும் மீறி, மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். கிங்டம் திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. முன்னதாக கிங்டம் படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதி, சென்சார் போர்டு அனுமதித்த பிறகு அந்த திரைப்படத்தை எந்த வகையிலும் தடுக்க முடியாது.
ஜனநாயகத்தில் கருத்துக்களைத் தெரிவிக்க அனைத்து தரப்பினருக்கும் உரிமை உள்ளது. போராட்டமாக இருந்தாலும் ஜனநாயக ரீதியாக நடத்த வேண்டும். வன்முறையில் ஈடுபடக் கூடாது. படம் திரையிடுவதைத் தடுக்கக் கூடாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















