கண்டா வரச் சொல்லுங்க.. மாரியம்மாளுக்கு உதவ ‛கண்டா வரச் சொல்லுங்க’
சிவகங்கை மாவட்டம் கிடாக்குழி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாரியம்மாள். அதனாலேயே, இவரது பெயர் கிடாக்குழி மாரியம்மாள் என்று அழைக்கப்படுகிறார்.
கண்டா வரச் சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச் சொல்லுங்க..
கர்ணன கையோட கூட்டி வாருங்க..
இந்தப் பாட்டும் அதைப் பாடிய மாரியம்மாளின் குரலும் கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. மாரி செல்வராஜின் படமும் ஹிட், தனுஷின் நடிப்பும் ஹிட், கண்டா வரச்சொல்லுங்க பாடலும் ஹிட். ஆனால், இப்போது மாரியம்மாளின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கிடாக்குழி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாரியம்மாள். அதனாலேயே, இவரது பெயர் கிடாக்குழி மாரியம்மாள் என்று அழைக்கப்படுகிறார். மாரியம்மாள் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ்த் திரையிலும், வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரை சம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் பாடி இருக்கிறார்.
பல ஆண்டுகளாகப் பல பாடல்களைப் பாடியிருந்தாலும் கூட கர்ணன் படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றார். பட்டித்தொட்டி எல்லாம் அவருடைய பாடல்கள் ஒலிக்க, நியூஸ் சேனல்கள் எல்லாம் அவருடைய பேட்டிக்காக அணிவகுக்க தன்னுடைய 50 வருட கனவு நிறைவேறி விட்டதாக நெகழ்ச்சியும், மகிழ்ச்சியுமாக இருந்தார் மாரியம்மாள்.
ஆனால், மாரியம்மாளின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியானதாக இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னரே கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். மகளின் கணவரும் சில வருடங்களிலேயே காலமானார். வாழ்க்கை ஓட ஓட விரட்ட ஒற்றை மனுஷியாக இருந்து தனது மகள், பேரன்கள் என்று பலரையும் மாரியம்மாள் உழைத்துக் காப்பாற்றி வந்துள்ளார்.
விதி அவரை விடவில்லை. கர்ணன் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்த சில மாதங்களிலேயே அவரது பேரனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
சிகிச்சைக்காக சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்கி அவருக்கு சிகிச்சை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கெனவே கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் கிடப்பில் போயின.
பேரனின் சிகிச்சைக்காக கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டு சொந்தமாக இருந்த வீட்டையும் விற்று விட்டார்கள். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
நோய், தொழில் நஷ்டம் என கடுமையன நிதி நெருக்கடியால் வாடும் அவர், கடந்த மூன்று மாதங்கள் வீட்டு வாடகை கூட கொடுக்கவில்லைள்.
இன்னும் எத்தனை கஷ்டங்களை தான் நான் தாங்குவேன், முடிந்தவர்கள் கஷ்டங்களை முடிந்த உதவிகளை செய்யுங்கள் என் பேரனை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கய்யா என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் மாரியம்மாள்.
கண்டா வரச் சொல்லுங்க.. மாரியம்மாளுக்கு உதவ யாரையும் கண்டா வரச் சொல்லுங்க என்று அவர் பாணியிலே தான் கேட்க வேண்டும் போல்.
இந்த உலகம் இன்னும் அன்பு நிறைந்ததாகத் தான் இருக்கிறது. நிச்சயம் மாரியம்மாளுக்கு உதவிக் கரம் நீளும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.