9 years of Papanasam : எளிமையான திரைக்கதை.. ஆனால் அனுபவம் புதுமை... 'பாபநாசம்' வெளியான நாள் இன்று!
9 years of Papanasam : ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'த்ரிஷ்யம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டது. அப்படி தமிழில் வெளியான படம் தான் 'பாபநாசம்'.
தமிழ் சினிமாவில் திரைக்கதை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. திரைக்கதை மீது நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட எந்த ஒரு படமும் தோற்றுப்போனதாக சரித்திரமே இல்லை. அந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரு மறக்கமுடியாத அனுபவம் தந்த படம் தான் 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வெளியான 'பாபநாசம்' திரைப்படம்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013ம் ஆண்டு மோகன் லால், மீனா உள்ளிட்டோரின் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து இது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் ரீ மேக் செய்யப்பட்டு வெளியானது. அப்படத்தின் தமிழ் வர்ஷன் தான் 'பாபநாசம்'. கமல், கவுதமி, கலாபவன் மணி, நிவேதிதா தாமஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.
எளிமையான திரைக்கதை என்றாலும் அது பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்து மேஜிக்கல் மொமெண்ட் ஏற்படுத்தியது. சுயம்புலிங்கமாக நடித்த கமல்ஹாசன் ஒரு புத்திசாலி சாமானிய மனிதனின் பிரதிபலிப்பாக அலட்டல் இல்லாமல் வெகு சிறப்பாக தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அதே போல ஆஷா சரத் ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், மகனின் நிலை அறியாது தவிக்கும் தாயாகவும் இருவேறு உணர்ச்சி நிலைகளை மிகவும் திறமையாக வெளிப்படுத்தினார். கலாபவன் மணியின் நடிப்பும் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. கவுதமி அளவான நடிப்பால் மனம் கவர்ந்தார்.
திரைப்படங்களை பார்த்து பார்த்து தன்னுடைய அறிவை வளர்த்து கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும் அதை அவர் மேற்கொண்ட விதம் வியப்பை ஏற்படுத்தியது.
அமைதியாக நகர்ந்த குடும்பத்தில் சூறாவளி போல ஒரு சிக்கல் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையை அப்படியே தலைகீழாக புரட்டிபோடுகிறது. விபரீதம் போலீசுக்கு தெரியாததால் குடும்பம் சின்னாபின்னமாக சிதைந்து விடும் என்ற பயத்தால் சுயம்புலிங்கம் எடுக்கும் முயற்சி என்ன? தன்னுடைய குடும்பத்தை போலீசிடம் இருந்து காப்பாற்றுகிறாரா இல்லையா என்பது தான் கதைக்களம். ஆனால் ஆகஸ்ட் 2ம் தேதி சுயம்புலிங்கம் தன்னுடைய குடும்பத்துடன் தென்காசியில் தான் இருந்தார் என்பதை அனைவர் மனத்திலும் பதிய வைக்க அவர் எடுத்த முயற்சிகள் தத்ரூபமானது. இன்றும் ஆகஸ்ட் 2 என்றால் சுயம்புலிங்கமும் அவரின் குடும்பமும் தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.
படத்தின் காட்சிகளை முன்னும் பின்னுமாக மாறிமாறி காட்டியது படத்தை திரில்லர் ரேஞ்சுக்கு எடுத்து சென்றது. மலையாள த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் படமாக வெளியான 'பாபநாசம்' 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 9 ஆண்டுகளை கடந்தும் மறக்க முடியாத ஒரு ஜாலத்தை ஏற்படுத்தியது.