Kamal Haasan Birthday: இது நவம்பர் மாதம் அல்ல, நம்மவர் மாதம்.. கமலா திரையரங்கில் பிரமாண்டமாய் ‘விருமாண்டி’! எப்போது தெரியுமா?
வருகின்ற 6ம் தேதி இரவு 8 மணி முதல் 7ம் தேதி இரவு வரை மூன்று நாட்களுக்கு நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த விருமாண்டி திரைப்படத்தை சென்னையில் உள்ள கமலா திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.
வருகின்ற நவம்பர் 7ம் தேதி உலகநாயகன் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் வருகிறது. இதை வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
அந்த வகையில், வருகின்ற 6ம் தேதி இரவு 8 மணி முதல் 7ம் தேதி இரவு வரை மூன்று நாட்களுக்கு நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த விருமாண்டி திரைப்படத்தை சென்னையில் உள்ள கமலா திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ரோபா சங்கர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “எல்லாருக்கும் வணக்கம்! நான் உங்கள் ரோபோ சங்கர் பேசுறேன். ஆண்டவர், உலகநாயகன், பத்மஸ்ரீ டாக்டர். கமல்ஹாசன் சாருக்கு அவரது 69வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது பிறந்தநாளான வருகின்ற 7ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடும் வகையில் உலகத்தின் எங்கேயும் நடக்காத ஒரு விஷயத்தை நாம் செய்ய இருக்கிறோம். 7ம் தேதி வடபழனி கமலா திரையரங்கில் விருமாண்டி திரைப்படத்தை திரையிட அனுமதி வாங்கியுள்ளோம். அதற்கு உலகநாயகன் கமலஹாசனும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், கமல்ஹாசன் அலுவலகத்தில் இருந்தும் அதிகாரப்பூர்வ ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
7ம் தேதி திரையிட திட்டமிட்டிருந்த நிலையில், கமலா திரையரங்கம் 6ம் தேதி இரவே போட அனுமதி தந்துள்ளனர். இதையடுத்து, 6ம் தேதி இரவு முதலே கொண்டாட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இது நவம்பர் மாதம் அல்ல, நம்மவர் மாதம். இந்த மாதத்தில் வருகின்ற வெள்ளி, சனி, ஞாயிறை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறோம். 6ம் தேதி இரவு 8 மணி காட்சி ஆரம்பம் ஆகிறது, பிரமாண்ட வரவேற்பு, பிரமாண்ட ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மொத்த பக்தர்களும் கமலா திரையரங்கு வர போறாங்க, வேற எந்த தியேட்டரிலும் திரையிடப்படவில்லை. கமலா தியேட்டரை திறந்து வைத்தது கமல்ஹாசன் சார்தான். அவரது ஒப்புதலின்பேரில் அடியேன் எனது தலைமையின்கீழ் பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து 3 நாள் கொண்டாட இருக்கிறோம். டிக்கெட் ஓபன் செய்த 3 நிமிடங்களில் 400 டிக்கெட்கள் விற்பனையானது. கிட்டத்தட்ட 3 நாள் திருவிழா போல் இருக்க போகிறது, 6ம் தேதி மாலை 6 மணிக்கே ஆண்டவரின் பக்தர்கள் அனைவரும் கமலா திரையரங்கிற்கு வந்துவிடுங்கள்.
விருமாண்டியை தெறிக்க விடுவோம், கமலா திரையரங்கில்...”என பேசியுள்ளார்.
இந்தியன் 2:
தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இந்தியன் 2, சில காலமாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் நேற்று மாலை படக்குழு இண்ட்ரோ வீடியோவை வெளியிட்டது. தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.