Kamal Haasan: 'கைகொடுத்து தூக்கி விட்டு கடைசி ஆள் மேல வந்ததும் விமர்சியுங்க..' தி.மு.க. மீதான விமர்சனங்கள் பற்றி கமல்
தமிழ்நாட்டின் தலைநகர் ஒவ்வொரு முறை சேதத்துக்கு ஆளாகும் போதும், மிதக்கும்போதும் அதற்கு மேல் எங்களை அன்பால் மிதக்கவிடும் தமிழ்நாட்டுக்கு சென்னை சார்பில் நன்றி என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்தும் திமுக அரசின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றியும் நடிகர் கமல்ஹாசன் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் பேசினார்.
தெருவுக்கே வர முடியல..
“தமிழ்நாட்டின் தலைநகர் ஒவ்வொரு முறை சேதத்துக்கு ஆளாகும் போதும், முழங்கால் அளவு, இடுப்பளவு, கழுத்தளவு தண்ணீராக இருந்தாலும் சரி, அதற்கு மேல் எங்களை அன்பால் மிதக்கவிடும் தமிழ்நாட்டுக்கு சென்னை சார்பில் நன்றி. நான் வரி கட்டறேன், மின் கட்டணம், ஜிஎஸ்டி, சொத்து வரி இவையெல்லாம் கட்டறேன். ஆனால் எதுக்கு நான் தெருவில் பிஸ்கட், பால் பாக்கெட்டுக்கு அலையணும்னு உங்களுக்கு கேள்வி இருக்கலாம். தெருவுக்கே வர முடியவில்லை அப்படிங்கற கேள்வி இருக்கு. அதுக்கு பதில் குற்றச்சாட்டுகளும் இருக்கு. உங்கள் மத்தியில் இருந்தே வரும் குரல்.
குளத்திலும் ஆறிலும் வீடு கட்டுனா என்ன பண்ண முடியும்னு கேக்கறாங்க.. அதுக்கு பதில் இன்னொரு கேள்வி வருது. ஆனால் இதையெல்லாம் கட்டியும் என் வீட்டுக்கு வரும் பாம்பு உன் வீட்டுக்கு வரல.. உன் வீட்டுக்கு வரும் பம்ப் என் வீட்டுக்கு வரல என்று கேட்கிறார்கள்.
‘கடைசி ஆள் மேல வந்ததும் விமர்சியுங்க'
இதை அரசியல் என்று நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் உரிமைக்குரல். அரசியல் எந்த சித்தாந்தமாக இருந்தாலும் இதுக்கு செவிமடுத்தே ஆக வேண்டும். விமர்சனம் வைக்க வேண்டாம்னு சொல்லல.. ஆனா இந்த நேரத்துல அவங்களுக்கு கை கொடுத்து தூக்கிவிட்டு கடைசி ஆள் மேல வந்ததும் விமர்சனம் வைக்கலாம். இது நம்ம ஊர், நம்ம நாடு. கோபத்தில் வருவதை கோபமில்லாமல் செய்தால் அதற்கு இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்” என கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் சென்னையைத் தாக்கிய நிலையில், வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், அடுத்தடுத்த நாள்களில் மழைநீர் வெளியேற முடியாமலும், மின்சாரம் இல்லாமலும் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீட்டுத் தொகையாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் சேதாரங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் வடிகால் அமைப்புகளில் சரிவர அமைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகளும், வடிகால் அமைப்புகள் சரிவர அமைக்கப்பட்டதால் தான் சென்னை இப்படி விரைந்து மீண்டு வருகிறது என திமுக தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.