(Source: ECI/ABP News/ABP Majha)
‛நல்லவேளை... அதை படத்தில் காட்டவில்லை...’ அசல் ‛ஜெய்பீம்’ சந்ரு சிறப்பு பேட்டி!
லாக்கப்பில் இருந்த ராஜாக்கண்ணு, தனது மனைவியான பார்வதியை சந்திக்கவில்லை. பார்வதியிடம் காவல் துறையினர் சாப்பாடெல்லாம் எடுத்துவர சொன்னார்கள்; அதன்படி அவரும் சமைத்து கொண்டுவந்தார்.
சூர்யா நடித்து தயாரித்திருக்கும் படம் ஜெய் பீம். இருளர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை காவல் துறையினர் லாக்கப்பில் வைத்து கொலை செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் வெளிவரவில்லை.
படத்தில் சூர்யா ஏற்று நடித்த சந்துரு என்ற கதாபாத்திரம்தான் நீதியரசர் சந்துரு. ராஜாக்கண்ணு வழக்கில் ஆஜராகி காவல் துறையினரின் அட்டூழியங்களை நிரூபித்த பெருமைக்கு சொந்தக்காரர்.
அவர் Behindwoods சேனலுக்கு ஜெய்பீம் படம் குறித்து அளித்த பேட்டியில், “ ஜெய் பீம் படத்தில் காட்டப்பட்ட காவல் துறையின் அட்டூழியங்கள் சாம்பிள்தான். 1993ல் ராஜாக்கண்ணு வழக்கில் நடந்ததைவிட அதிகம் நடந்திருக்கிறது.
லாக்கப்பில் இருந்த ராஜாக்கண்ணு அவரது மனைவியான பார்வதியை சந்திக்கவில்லை. ராஜாக்கண்ணு மனைவி பார்வதியிடம் காவல் துறையினர், சாப்பாடெல்லாம் எடுத்துவர சொன்னார்கள். அதன்படி அவரும் சமைத்து கொண்டுவந்தார்.
சாப்பாட்டை எந்த இடத்தில் வைத்துவிட்டு சென்றாரோ அதே இடத்தில் சாப்பாடு இருந்தது. அப்போதுதான் இவருக்கு கணவரின் நிலை குறித்து சந்தேகம் வந்தது. ராஜாக்கண்ணு ஓடிப்போய்விட்டார் என்றே காவல் துறையினர் சொல்லிவந்தனர்.
இந்த வழக்கை தாக்கல் செய்தபோது எங்களுக்கு பெரிதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இவ்வழக்கில் தாயுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் அளவு மகனையும், தாயையும் நிர்வாணப்படுத்தினார்கள். இதனை நாங்கள் நீதிமன்றத்திலும் கூறினோம்.
நீதிமன்றம் கடுமையான பார்வை எடுத்ததற்கு இதுபோன்ற கேவலமான விஷயங்களை காவல் துறை செய்ததும் காரணம். நல்லவேளை இதுபோன்ற விவகாரங்களை படத்தில் காட்சிப்படுத்தவில்லை.
ராஜாக்கண்ணு இறந்துபோய்விட்டாரா என்பதை கண்டுபிடிக்க இறந்த நிலையில் இருந்த அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவினார்கள். அவருடன் கைது செய்யப்பட்ட அவரது உறவினர்களை கேரளாவில் சென்று கண்டுபிடித்தோம்.
டெல்லியில் பானிவாலா வழக்கு என ஒன்று நடந்தது. பானிவாலா தண்ணீர் வியாபாரம் செய்பவர். அவரை காவல் துறையினர் கட்டாயப்படுத்தி 3000 வழக்குகளுக்கு சாட்சி சொல்ல செய்தனர். ஆனால் அதில் பல வழக்குகளுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அந்த வழக்கு இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு.
அதேபோல் அத்தியூர் விஜயா வழக்கில் இருளர் இன இளைஞர் ஒருவரை 5 பைக்குகள் திருடியதாக அடித்து ஒத்துக்கொள்ள வைத்தனர். நீதிமன்றம் வந்த அந்த இளைஞர் தனக்கு சைக்கிளே ஓட்ட தெரியாது என்று சொல்லி அதை நிரூபித்த பிறகுதான் அவர் விடுதலை ஆனார். ராஜாக்கண்ணு கொலையில் தொடர்புடைய காவல் துறையினருக்கு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது” என ராஜாக்கண்ணு வழக்கிலும் பல வழக்குகளிலும் காவல் துறையினரின் அட்டூழியங்களை பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்