Gnanavel Raja: ‘ அமீர் மனதை புண்படுத்தியிருந்தால்...” - வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்க அறிக்கையின் விவரம்..

பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஞானவேல்ராஜா முன்வைத்து கடுமையாக பேசினார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் அமீர் மனதை புண்படுத்தியிருந்தால் ’அமீர் அண்ணாவிடம்’ வருத்தம் தெரிவித்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்க அறிக்கையின் விவரம்..
இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை கடந்த சில வாரங்களாக பேசு பொருளாகியுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதை தொடர்ந்து, இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதிராஜா, சுதா கொங்கரா,பொன்வண்ணன், கவிஞர் சினேகன் உள்பட பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். உங்களுக்குள் பிரச்னை என்ராலும் இயக்குநர் அமீரை வரம்பு மீறி பேசுவது முறையல்ல என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் ஞானவேல் ராஜா பேசுவது மரியாதையாக இல்லை என்றும் கருத்து நிலவி வந்தது. இந்நிலையில், தன்னுடைய வார்த்தைகள் புண்படுத்தும்படி இருந்திருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி! அன்புடன் ஞானவேல்ராஜா” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

