Ilaiyaraja Birthday:இசையில் மூழ்கி நீந்தி கரை சேர மேஸ்ட்ரோ இசை போதுமே... இசைஞானியின் 80வது பிறந்த நாள் இன்று...
இன்று இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்தநாள். அவரை பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
நெடுந்தூர பயணங்களின் போது அனுமதி கேட்காமல் தேகத்தை தழுவிக்கொள்ளும் தென்றல் காற்று போன்றது தான் இளையராஜாவின் இசை. மெல்லிய ஒலியில் வரும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிக்கும் எல்லா பயணங்களும் சுகமானதே. அவரின் பாடல்களில் இது பெஸ்ட் என்று சொல்லி விடுவது எளிது ஆனால் இது தான் பெஸ்ட் என பிரித்து கூறுவது சற்றே கடினமான காரியம். உணர்வுகளோடு உறவாடி, மனதை இலக செய்து, நினைவுகளை கசிய விட்டு, காற்றில் பறப்பதாய் ஒரு உணர்வை தரும் அவரின் பாடல்கள் ஏராளம்.
1976-ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இளையராஜா தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற ”மச்சானை பார்த்திங்களா அந்த மலை வாழை தோப்புக்குள்ளே” என்ற பாடல் இவரின் இசையில் உருவானது. இப்பாடலில் நாட்டுப்புற இசையை அதன் தரம் குறையாமல் வழங்கி இருப்பார் ராஜா.
எஜமான் படத்தில் இடம்பெற்ற ”நிலவே முகம் காட்டு எனை பார்த்து ஒளி வீசு” என்ற பாடலை இசைஞானி சிந்து பைரவி ராகத்தில் அமைத்திருப்பார். பாடல் துவக்கத்தில், மென்மையான இசை, சிந்தையை ஈர்க்கும் விதமாக, பொழிந்து, நம்மைப் பாட்டோடு ஒன்றச் செய்து விடும். இதன் இசை, அமைதியாக, ஓடும் ஆறு, பின் வெள்ளமாய், மெதுவாய் வேகமெடுப்பது போல், நம்மைக் கைப்பிடித்து, நடத்திச் சென்று , பாடல் வரிகளோடு, பிணைத்து விடும்.
உல்லாசப் பறவைகள் படத்தில் இடம்பெற்ற ”தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்” என்ற பாடல் நிச்சயம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடும். அதிலும் பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னும், முடிவதற்கு முன்பும் வரும் அந்த ரீங்காரம் இசை நாடியை இதமாய் வருடி விட்டு செல்லும்.
இளையராஜா பாடல் லிஸ்டில் ”தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல” என்ற பாடலை அவ்வளவு எளிதாய் கடந்து விட முடியாது. இப்பாடலின் வழியே சிறிய நீரோடையில் மெல்லிய நீரோட்டம் போன்ற இசையை அள்ளி தெளித்திருப்பார் இசைஞானி. அதுவும் இதில் இடம் பெறும் கதையா விடுகதையா ஆவதில்லையே அன்பு தான் என்ற நோட் நம்மை ஏதோ செய்து விடும்.
மெளன ராகம் என்ற படத்தில் ராஜாவின் இசையில் உருவான மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா என்ற பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாதது.
மாலை என் வேதனை கூட்டுதடி, கற்பூர பொம்மை ஒன்று, நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காதே, இளமை எனும் பூங்காற்று, இப்படி மேகம் போல நீண்டு கொண்டே போகும் ராஜாவின் கீதங்கள். மகிழ்ச்சி, தூக்கம், பிரிவு, சோகம், காதல், வலி, என அனைத்து தருணங்களிலும் நம்மை ஆட்கொண்டு விடும் இளையராஜா உண்மையில் இசையின் ராஜா தான். நினைவுகளை தீண்டி, தலையணை கூட அறிந்திடாது கண்ணீரை ததும்பவிட்டு, துடைத்து போகும் இசை ஞானியின் இசையை, மருந்தென்பதா? இல்லை மந்திரம் என்பதா? இன்று 80-வது பிறந்தநாள் காணும் இசைக் கடவுளை வாழ்த்தி மகிழ்கிறது ஏபிபி நாடு.