Ilaiyaraaja Birthday: “நான் ராஜா... எப்போதுமே” இசைஞானி இளையராஜாவுக்கு 80-வது பிறந்தநாள்!
'மாடர்ன் லவ்'வுக்கு மாடர்னாக இசை அமைத்து தன் இருப்பை அழுந்தப் பதிக்கிறார். பாளையம் பண்ணையப்புரம், சின்னத்தாயி பெத்த மவன் இதே தேதியில் தான் 1943 இல் பிறந்து இசை அரசனாக வாழ்ந்து வருகிறார்.
"ராஜாதி ராஜன் இந்த ராஜா…" என்று அவரே பாடும்போது கண்ணில் தெரியும் கர்வமும் பெருமையும் கொஞ்சமும் கூடுதல் இல்லை என்று அவர் பாடலைக் கேட்டு உருகும் அனைவருக்கும் புரியும். "அவர் அவ்ளோதான் டொக்காகிட்டார்…", என்று நினைத்த எல்லோரிடமும் காட்டுமல்லியை சுவாசிக்க தந்துவிட்டு அமைதியாக நிற்கிறார். 'மாடர்ன் லவ்'வுக்கு மாடர்னாக இசை அமைத்து தன் இருப்பை அழுந்தப் பதிக்கிறார். பாளையம் பண்ணையப்புரம், சின்னத்தாயி பெத்த மவன் இதே தேதியில் தான் 1943 இல் பிறந்து இசை அரசனாக வாழ்ந்து வருகிறார்.
காதலுக்கு இளையராஜா
இளையராஜாவின் பழைய பாடல்களை எல்லாம் பேசி பேசியே இன்னும் சிலாகித்து தீராத நிலையில், நம்மை இன்னும் அதிசயிக்க வைக்க தீ இன்பத்தில் எலக்ட்ரிக் கிட்டாருடன் வருகிறார். நெஞ்சில் ஒரு மின்னல் என துள்ளலான இளமை கால காதலை அப்படியே உருக்கி ஒரு பாடலாக கொண்டு வந்திருக்கிறார். இப்படி மாடர்ன் லவ் ஆல்பம் முழுக்க இளையராஜாவின் ராஜ்யம். "இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு, இளையராஜா எந்தன் பாட்டிருக்கு…", என்று இளையராஜா பாடி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனாலும் இத்தனை ஆண்டுகளும், அவர் தன் பாடல்களை தந்து கொண்டிருப்பது அதிசயிக்க செய்கிறது.
போதைப்பொருள் கலந்த இசை
ஒரு பேரமைதியான இரவில் 'துள்ளி எழுந்தது பாட்டு' பாடலை கேட்டால், லேசாக கூட அதிரும் சத்தத்தை அதில் பயன்படுத்தி இருக்க மாட்டார். ஒரு வேளை கேட்கும்போதே தூங்கியிருந்தால் எழுந்துவிடுவோமோ என்று 'பாட்டு' என்ற வார்த்தையை கூட அழுத்தமின்றி பாடுவார். நாம் அவரைப்பற்றி கொள்ளும் ஆச்சர்யங்களெல்லாம் ஒன்றுமில்லையென்று அதன் பின் அவர் எடுத்து வைக்கும் செயலென்பது இமயத்தின் உயரத்தை மீள்கிறது. இரு இன்ஸ்ட்ருமெண்ட்களை இணைத்து பிறக்க வைக்கும் இசையில் ஏதோ போதைப்பொருள் கலக்கிறாரென்றே நினைக்கிறேன். பூங்காற்று புதிரானது பாட்டை கூட எடுத்து கொள்ளலாம், ஏசுதஸின் குரலை மிஞ்சி வயலினும் கிட்டாரும் விளையாண்டிருக்கும். இளமை எனும் பூங்காற்றின் முதல் தொடக்க இசை மயக்க நிலைக்கே கொண்டு செல்லும்.
இசைக்கருவிகளை பயன்படுத்தும் விதம்
காந்தம் கொண்ட குரலில் சந்தத்தில் பாடாத கவிதைகளை சாந்தமாக பாடும் ராஜாவின் குரலுக்கு மயங்குபவர்களும் பலர். இயல்பாகவே தெய்வீகம் பூண்ட குரலில் ஜனனி ஜனனியின் சரணம் நம்மை அவரிடமே சரணடைய செய்யுமே. தென்றல் வந்து தீண்டும்போது பாடலின் இசை தீண்டும்போதெல்லாம் குரல் வந்து கட்டளையிடும் என்னை வணங்கென்று. காதல், மெலடி, தாண்டி அவர் செய்துள்ள பாடல்கள், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகள், அதிலிருந்து வரும் சத்தம், அதை பயன்படுத்திய விதங்கள் பேராச்சர்யம்தான்.
பேருந்துகளில் நிறைந்தவர்
சகலகலா வல்லவன், என் ஜோடி மஞ்சக்குருவி, விக்ரம், போட்டு வைத்த காதல் திட்டம், வாவா பக்கம் வா போன்ற பாடல்களின் இசை அரேஞ்மெண்ட்களே பல அனுபவங்களை தரும். இவற்றை இசை கச்சேரியாக பார்ப்பது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். துக்கம், மகிழ்ச்சி, நகைச்சுவை, கோபம், காதல் என நமதனைத்திற்கும் இசையமைத்த இசைக்கடவுள் இன்றும் அதை செய்து வருவது நம்மை மகிழ்விக்கத்தான், நாம் சிலாகிக்கத்தான். தமிழகத்தின் பேருந்துகளில் நிறைந்தவர் ராஜா, அவர் நீடூடி வாழ அவர் பாடல்கள் காலம் கடந்து வாழ இந்த பேருந்து தொடர்பே போதுமென்று நினைக்கிறேன். பயணங்களை நிறைக்கும் யுக்தி அறிந்த மந்திரவாதியை காலம் போற்ற, இன்னும் பாடல் இயற்ற அவரை குளிர்வித்துகொண்டே இருக்கும் இவ்வுலகு.