ரஜினி கமல் கூட்டணியை இயக்கப்போவது இளம் இயக்குநர்களா? சீனியர்களா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த விவாதம் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளது

ரஜினி கமலை இயக்கப்போகும் இளம் இயக்குநர்
46 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்க இருப்பதாக ரஜினி மற்றும் கமல் இருவரும் உறுதிபடுத்தியுள்ளார்கள். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது. ஆனால் படத்திற்கான கதையும் இயக்குநரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி கூறியுள்ளார் . முன்னதாக லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் இப்படத்தை இயக்கவில்லை என தெரியவந்துள்ளது. அப்படியென்றால் ரஜினி கமலை இயக்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் துவங்கியுள்ளது.
சீனியர்களா ? ஜூனியர்களா?
தமிழ் சினிமாவின் இரு உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமலை இயக்குவது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. ஷங்கர் , மணிரத்னம் , கே.எஸ் ரவிகுமார் போன்ற இயக்குநர் இரு நடிகர்களை வைத்து மிக்கபெரிய வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். அனுபவ ரீதியாக இவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றாலும் ஆனால் தற்போது இவர்களால் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவரும் விதமான படங்களை எடுக்க முடியுமா என்பது கேள்வியே. ஷங்கரின் சமீபத்திய படமான இந்தியன் 2 , கேம் சேஞ்சர் , மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை தழுவின என்பது குறிப்பிடத் தக்கது.
மறுபக்கம் இளம் இயக்குநர்கள் அனுபவம் குறைவு என்றாலும் ரசிகர்களை கவரும் விதமாக இவர்களால் கதை சொல்ல முடிகிறது. இன்று முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் , நெல்சன் திலிப் குமார் , எச் வினோத் , அட்லீ , கார்த்திக் சுப்பராஜ் ஆகியவர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து விஜய் , அஜித் , ரஜினி போன்ற ஸ்டார்கள் படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்கள். அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி , பிரதீப் ரங்கநாதன் , அஸ்வத் மாரிமுத்து , மாவீரன் பட மடோன் அஸ்வின் , அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி , போர் தொழில் விக்னேஷ் ராஜா போன்ற பலர் இந்த வரிசையில் சொல்லலாம் . இவர்களில் யாருக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைக்கப் போவது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
ஜெயிலர் 2 , KH237
தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மறுபக்கம் கமல்ஹாசனின் 237 ஆவது படத்தை இரட்டை ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு இயக்க இருக்கிறார்கள். ஷியாம் புஷ்கரன் இப்படத்திற்கான திரைக்கதை எழுதவிருக்கிறார்.





















