“எனக்கு பசங்க என்றாலே பயம்.. அம்மாவ பாராட்டுங்க அப்பா” - கண்ணீர் விட்ட நடிகை திவ்யபாரதி!
சமூக வலைதளங்களில் இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ‘பேச்சிலர்’ திவ்ய பாரதி கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் ப்யூட்டி, இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ‘பேச்சிலர்’ திவ்ய பாரதி தான். சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கும் அவர், கண்கலங்க அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் க்ரஷ்:
சதீஷ் செல்வ குமார் இயக்கத்தில் ஜி.வி,பிரகாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘பேச்சிலர்’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார். திரைப்படத்தில் அறிமுகம் தான் என்றாலும், அப்படி யாரும் உணராத வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் திவ்யபாரதி. இளைஞர்களின் திடீர் க்ரஷ்ஷாக மாறிய அவர் இன்ஸ்டாகிராமில் அவ்வபோது தன் புகைப்படங்களை பதிவேற்றி அக்னி வெயிலைப்போல உருக்கிக் கொண்டிருக்கிறார்.
அழகின் ரகசியம்:
அவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். நெறியாளர் யாரும் இல்லாமல் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில் அமைந்த அந்த நிகழ்ச்சியில் தன் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் திவ்யபாரதி.
திவ்யபாரதி எப்படிப்பட்ட காதலி? என்ற கேள்விக்கு இதுவரை காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இதுவரை குடும்பம், கெரியர் என்று சென்று கொண்டிருக்கிறது. கெரியர் தான் என்னோட முதல் காதல் என்று பதிலளித்துள்ளார்.
அழகின் ரகசியம் எது? என்ற கேள்விக்கு அழகு பார்க்குறவங்க கண்ணுல தான் இருக்கு. ஆழ்மன அமைதி இருந்தாலே அழகாகத் தெரிவோம் அது தான் ரகசியம் என்று கூறியுள்ளார்.
கதறி அழுத திவ்யா:
அவருடைய நீண்ட நாள் கனவு எது? என்ற கேள்விக்கு, தன்னுடைய நீண்ட நாள் கனவு ஆசை எல்லாமே என் அம்மாவிற்கு சொந்த வீடு வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பது தான் என்று கூறினார். யாரிடமும் சொல்லாததை பகிர்ந்துகொள்ள சொன்னபோது, தன்னுடைய அப்பாவிற்கு கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை வைத்தார் திவ்ய பாரதி. “சமீபத்தில் கால் செய்திருந்தபோது என் பெயர் என்ன வென்று கேட்டீர்கள்.. உங்களிடம் கோபப்படுவதா, உங்களது சூழ்நிலை அப்படியா என்று கேட்கத்தோன்றியது. அம்மா ஒற்றை ஆளாக இருந்து என்னையும், தம்பியையும் இந்த அளவிற்குக் கொண்டுவந்தார்கள். அதற்காக நீங்கள் நேரில் பார்த்து அவரைப் பாராட்ட வேண்டும். இது தான் அவரிடம் வைக்கும் கோரிக்கை என்று கூறினார்.
சினிமாவில் கதாநாயகிகள் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்ற கேள்விக்கு, எதை செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று யாரும் யாரையும் சொல்லக்கூடாது என்று கூறிய அவர், மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். சினிமாவில் ஹீரோயின்கள் குறித்து ஜட்ஜ்மெண்ட்டல் பேச்சு பொதுமக்களிடம் இருந்து வரும் அதை பொருட்படுத்தக்கூடாது என்று கூறினார்.
கமல் தான் க்ரஷ்:
தமிழ்சினிமாவில் தன்னுடைய க்ரஷ் கமல்ஹாசன் தான் என்று கூறிய திவ்ய பாரதி, தனக்கு பசங்க என்றாலே பயம் என்றும், க்ளாஸில் பசங்க கூட பேசியதில்லை என்றும், பள்ளியில் படிக்கும் போது பசங்க கேங்கா நிற்கும்போது தலையை குனிந்துகொண்டே செல்வோம். அப்படி இருந்த நான் இப்போது ஆண்களுக்கு மத்தியில் தான் வேலை பார்க்கிறேன். இந்த அளவிற்கு மாறியிருப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்று திவ்யபாரதி கூறினார்.
தன் அம்மா பற்றி பேசும்போதும், அப்பாவுக்கு கோரிக்கை வைக்கும்போதும் கண்ணீர் விட்டு திவ்யபாரதி அழுதது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. அதை கமெண்ட்டிலும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.