LEO First Single: லியோவில் திருமலை விஜய்.. கில்லி, மாஸ்டர் ரெஃப்ரன்ஸ்..ரோலக்ஸிற்கு சவால்..இதெல்லாம் கவனித்தீர்களா?
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் இருந்து வெளியான நா ரெடி பாடலில் இடம்பெற்றுள்ள, சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் இருந்து வெளியான நா ரெடி பாடலில் இடம்பெற்றுள்ள, சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
அதிரும் இணையதளம்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. விஜயின் பிறந்தநாளையொட்டி, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடாவன் எழுதியுள்ள இந்த பாடலை, விஜய் பாடியுள்ளார். நா ரெடி தான் வரவா, எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா எனும் வகையில் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடல் முழுவதும் தரை லோக்கலாக பாடியுள்ள விஜய், தனது கதாபாத்திரத்தம் இந்த படத்தில் எப்படி இருக்கும் என்பதையே இந்த பாடல் வரிகள் மூலம் உணர்த்தியுள்ளார். யூடியூபில் வெளியான உடனேயே இந்த பாடலை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் டிரெண்டாக தொடங்கியுள்ளது. அதேநேரம், இந்த பாடலில் பல சுவாரஸ்ய தகவல்களும் மறைந்துள்ளன.
”திருமலை” விஜய்:
இந்த பாடலில் விஜயின் உடை அலங்காரத்தை பார்த்த உடன் அனைவருக்கும் நினைவில் வருவது நிச்சயம் திருமலை படம் தான். விஜயை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் எனும் பெருமை திருமலை படத்தையே சேரும். அந்த படத்தில் இடம்பெற்ற ஓபன் ஷர்ட் ஸ்டைலை தான் இந்த படத்திலும் விஜய் பின்பற்றியுள்ளார். பாடலின் பெரும்பாலான பகுதிகளில் விஜய் புகைபிடித்தவாறு தான் நடனமாடியுள்ளார். இதே ஸ்டைலை தான் கில்லி படத்திலும் செய்து விஜய் அசத்தியிருந்தார். மதுரையில் முத்துப்பாண்டியையே அடித்து விட்டு, தனலட்சுமியுடன் அங்கிருந்து வெளியேறும் விஜய், வாயின் ஓரத்தில் சிகரெட்டை வைத்து இருக்கும் காட்சியை தான் இந்த பாடலும் நினைவூட்டுகிறது. அதோடு, மில்லி உள்ள போன கில்லி வெளிய வரும் என்ற வரியும் பாடலில் இடம்பெற்றுள்ளது.
மாஸ்டர் ரெஃப்ரன்ஸ்:
விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் ஒத்து பாடல் பெரிய ஹிட் அடித்தது. அதே பாணியில் தான், நா ரெடி தான் பாடலும் விஜயை வரவேற்பது போன்ற வோகல்ஸ் இடம்பெற்றுள்ளன. வாத்தி கம்மிங் ஒத்து பாடலில் விஜய் ஷோபாவில் இருந்து எழுந்து சோம்பல் முறிக்கும் காட்சி, அப்படியே அனிமேஷனாக இந்த பாடலில் காட்டப்பட்டுள்ளது. அதே காப்பையும் விஜய் அணிந்துள்ளார்.
லியோ - ரோலக்ஸ் மோதல்:
விக்ரம் படத்தின் இறுதியில் காட்டப்பட்ட சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் கழுத்தில் தேள் படம் இடம்பெற்று இருக்கும். இந்நிலையில், நா ரெடி தான் பாடலில் ”தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா” எனும் வரி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யூனிவர்சில் லியோ மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரங்கள் மோதிக்கொள்வது உறுதி என ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். இதோடு, லோகேஷ் கனகராஜின் டிரேட் மார்க்கான, பிரியாணியும் இந்த பாடலில் தவறாமல் இடம்பெற்றுள்ளது.
விஜயின் கதாபாத்திரம்:
இந்த பாடலின் மூலம் விஜயின் கதாபாத்திரம் எத்தகையது எனவும் படக்குழு உணர்த்தியுள்ளது. அதன்பட், போதைப்பொருள் விற்பனை செய்யும் குழுவிற்கு விஜய் தலைமை தாங்குவார். குடி மற்றும் புகை என அத்தனை பழக்கமும் கொண்டவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடலில் இடம்பெற்றுள்ள பேரல் போன்றவற்றை பார்க்கும்போது, உள்ளூர் அளவில் போதைப்பொருள் விற்பனையில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே விஜய் நடத்தி வருவது போன்று தெரிகிறது.