‘ஹாய்’ பட வெற்றியால் உற்சாகம்: பத்திரிகை, ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்த கவின், நயன்தாரா படக்குழு
‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பத்திரிகை, ஊடக நண்பர்களை சந்தித்த படக்குழுவினர்.

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து தங்களது நன்றியை பகிர்ந்து கொண்டனர்.
படத்தின் வெற்றியை தொடர்ந்து நடைபெற்ற இந்த சந்திப்பில், படக்குழுவினர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார், இயக்குநர் விஷ்ணு எடவன், நடிகர் கவின், நடிகைகள் அம்ருதா சீனிவாசன், காவ்யா உள்ளிட்ட படக்குழுவினரும், மூத்த நடிகர்களான பிரபு, ராதிகா சரத்குமார், சுஹாசினி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் லலித்குமார் பேசும்போது, நல்ல கதையையும், நல்ல படத்தையும் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே ‘ஹாய்’ படத்தை தயாரித்ததாக தெரிவித்தார். படத்திற்கு தற்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ரசிகர்களின் நேர்மறையான எதிர்வினை உற்சாகம் அளிப்பதாகவும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, இயக்குநர் விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் என்றும், அவர் சிறப்பான படத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை படப்பிடிப்பின் தொடக்கத்திலேயே ஏற்பட்டதாகவும் கூறினார். இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், கவின் மற்றும் விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றுவது தனது நான்காவது படம் என்றும், பள்ளிப் பருவத்தில் இருவரும் கண்ட கனவு இன்று நனவாகியிருப்பதாகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.
நடிகை அம்ருதா சீனிவாசன், ‘ஹாய்’ ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படம் என்றும், கதை, இசை, படத்தொகுப்பு, இயக்கம் என அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பால் படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். நடிகர் பிரபு, கவின் சிறப்பாக நடித்துள்ளதாகவும், ஜென் மார்ட்டினின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாகவும் பாராட்டினார்.
இயக்குநர் விஷ்ணு எடவன், இது தனது முதல் திரைப்படம் என்பதால், இந்த வெற்றி தனக்கு மட்டுமல்லாமல் தன்னை நம்பி பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி என்று கூறினார். தயாரிப்பாளர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ். எஸ். லலித்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகர் கவின் பேசுகையில், மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவு தங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளதாக தெரிவித்தார். குடும்பத்துடன் கவலைகளை மறந்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
‘ஹாய்’ திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், சுஹாசினி, விடிவி கணேஷ், சத்யன், குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















