"அம்மாவுக்கு முன்னாடி இறந்திடுவேன்னு சொன்னார், அதேபோல நடந்தது"... மணிவண்ணன் மகன் ரகுவண்ணன்!
மின்சாரகண்ணா ஷூட்டிங்ல தளபதிய அறிமுக படுத்தினதும், என்னை பார்த்து லேசா சிரிச்சுட்டு போய்ட்டார். நான் நெனச்சேன், "என்னய்யா இந்தாளு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி சிரிச்சுட்டு போறாரு'ன்னு நெனச்சேன்.
தென்னிந்திய சினிமா திரை உலகில் உதவி இயக்குனராக அடி எடுத்து வைத்து பின் பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டது மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் புகழ் பெற்றவர் நடிகர் மணிவண்ணன். மணிவண்ணன் அவர்கள் சினிமா திரை உலகில் நடிகர், இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வாளர் ஆகவும் பங்காற்றியுள்ளார். இவர் தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 50 திரைப்படங்களை அவரே இயக்கியும் உள்ளார்.மணிவண்ணன் நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரும் ஆவார். அதனாலே மணிவண்ணன் சத்யராஜை வைத்து 25 படங்கள் எடுத்துள்ளார். நடிகர் மணிவண்ணனின் மனைவி செங்கமலத்தால் அவருடைய கணவர் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.மேலும், இவர் தன்னுடைய கணவனின் இறப்பினை குறித்து ஒவ்வொரு நாளும் அழுது அழுது புலம்பி இருந்துள்ளார். மேலும், மணிவண்ணன் இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கூட இருந்திருக்காது மணிவண்ணன் மனைவி செங்கமலம் தன்னுடைய உயிரிழந்தார்.
மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் நடித்து இருந்தார். என்னதான் மணிவண்ணன் மகனாக இருந்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை. இவருக்கு மணிவண்ணன் இறப்பதற்கு 3 மாதத்திற்கு முன் தான் நிச்சயதார்தம் முடிந்தது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆத்விக், ஆதித்யன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர் சிறுவயதிலிருந்தே தந்தை மணிவண்ணனுடன் இருப்பதால், பல நடிகர்கள், பிரபலங்களுடன் அவருக்கு ஏற்பட்ட சம்பவங்களை பற்றி ஸ்வாரஸ்யமான பேசினார். "அப்பாவுக்கும் எனக்கும் சின்ன வயசுல அதிகமா பேச வாய்ப்பில்லாம இருந்தது. என்னோட பத்து வயசு வரைக்கும் ரொம்ப பிசி இயக்குனர், அப்புறம் ரொம்ப பிசி நடிகர். அதனால் எனக்கும் அவருக்கும் எப்போவுமே சண்டை வந்துட்டே இருக்கும். அட்வைஸ் எல்லாம் பண்ண மாட்டார், ஆனா பண்ண ஆரம்பிச்சா அன்னைக்கு தூக்கம் போய்டும். 2011 க்கு பிறகுதான் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பாக்க ஆரம்பிச்சதால கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம். அப்புறம் தான் புரிஞ்சுது, ஒன்னும் பெரிய வித்யாசமெல்லாம் இல்ல.
ஒரே மாதிரி தான் பேசுறோம், யோசிக்குறோம், இத்தனை நாள் பேசாம இருந்திருக்கோம்ன்னு தோணுச்சு. ஆனா எல்லார்கிட்டயும் ரொம்ப ஜாலியா இருப்பார் என் கிட்ட மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதான் நான் சொல்லுவேன், ஆஸ்கார் வாங்குன நடிகரோட கேரக்டர கூட நடிச்சிடலாம், பெத்த அப்பன் கதைல நடிக்கவே முடியாதுன்னு நான் சத்யராஜ் சார்கிட்ட சொல்லுவேன். அப்பா நடிக்கும்போது, படையப்பா ஷூட்டிங்ல ரஜினிய பாத்தது ரொம்ப நெகிழ்ச்சியான சம்பவம். சிவாஜி சார் ரொம்ப நல்லா என்னை ஞாபகம் வைத்து, உடம்பு சரி இல்லன்னு சொன்னியே, இவருக்கு தானா? இப்போ எப்படி இருக்குன்னு கேட்டு ஞாபகமா பேசினார். எல்லாம் ரொம்ப நேரம் பேசிவிட்டு, 'நல்ல வேளை, நீ உங்கப்பன மாதிரி இல்லாம, உங்கம்மா மாதிரி பிறந்திருக்க'ன்னு சொல்லி அப்பாவை கலாய்ச்சிட்டு போய்ட்டார்.
அப்புறம் மின்சாரகண்ணா ஷூட்டிங்ல விஜயை பாத்தேன். அப்பா அறிமுக படுத்தினதும், என்னை பார்த்து லேசா சிரிச்சுட்டு போய்ட்டார், நான் நெனச்சேன், "என்னய்யா இந்தாளு ஏற்க்கனவே தெரிஞ்ச மாதிரி சிரிச்சுட்டு போறாரு'ன்னு நெனச்சேன். ஆனா செட்ல பயங்கர அமைதியான ஆளு. ரொம்ப அமைதியா இருப்பார், ஆனா வெளிலல்லாம் பாத்துட்டா பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டார். ரொம்ப நேரம் ஸ்வாரஸ்யமா பேசுவார். கமல் சாரை சத்யராஜ் சார் தான் கூட்டிட்டு போய் அறிமுக படுத்தி வச்சார்.
அப்போ கமல் அன்பே சிவம் ஷூட்டிங்ல இருந்தார், ஏவிஎம்ல நாங்க பக்கத்து செட்ல இருந்தோம். உடனே என்னை கூட்டிட்டு போய் அறிமுக படுத்தி வச்சார். என்ன பண்றீங்கன்னு கேட்டார், இது மாதிரி படம் நடிச்சிட்டு இருக்கேன் அங்கிள்ன்னு சொன்னேன். அங்கிள்னு கூப்பிட கூடாது, கமல்ன்னு கூப்பிடுன்னு சொன்னார். நியூ படம் பார்க்க சத்யம் தியேட்டர் போயிருக்கோம். நானும் நண்பர் ஒருத்தரும், நண்பர் யாருன்னா, இயக்குனர் சரண் உடைய தம்பி. நானும் அவனும் படம் பாத்துட்டு இருக்கும்போது, பின்னால இருந்து யாரோ கூப்பிட்டாங்க. திரும்பி பார்த்தா தலயும் அண்ணியும். நீங்க ரெண்டு பேரும் எப்படிடா பழக்கம்?'ன்னு ஆச்சர்யம் ஆகிட்டார். அப்புறம் இண்டெர்வெல்ல பாப்கார்ன் சாப்பிட போறேன்னு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடி வந்துட்டேன், திரும்ப போகல. அப்பவுடைய புத்தகங்கள் படிக்கிற பழக்கம் என்னை அவ்வளவு ஆச்சர்யப் படுத்தும்.
வீட்ல 20 ஆயிரம் புக்ஸ் இருக்கும். அத்தனையும் அவர் படிச்ச புத்தகங்களா இருக்கும். எந்த புக் எடுத்தாலும், முதல் பக்கத்துல அவர் கையெழுத்து போட்டு ஆரம்பிச்ச தேதி போட்ருப்பாரு, பின்னாடி கடைசி பக்கத்துல முடிச்ச டேட் போட்ருக்கும். அவருடைய புத்தக வாசிப்பை நான் எடுத்துக்கணும்ன்னு எப்போவுமே நினைப்பேன். அப்புறம் எங்க அம்மாவுக்கும் அவருக்கும் இருந்த அன்யோன்யம் நான் பாத்து வியந்த விஷயங்கள்ல ஒன்னு. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்க மாட்டாங்க. அம்மா உடம்பு சரியில்லாம மருத்துவமனைல இருந்தப்போ, எங்க அப்பா என்கிட்ட சொன்னாரு. என்னாலலாம் உங்கம்மாவ பிணமா பாக்க முடியாது. அவளுக்கு முன்னாடி நான் போய் சேர்ந்துருவேன்னு சொன்னார். அதே மாதிரி தான் நடந்துச்சு." என்று கூறினார்.